வந்தவாசியில் குறைதீர்வு நாள் கூட்டம் இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்வு நாள் கூட்டம் வேளாண்மை துறை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வந்தவாசியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடப்பது வழக்கம். இந்த மாதத்திற்கான கூட்டம் குறித்து விவசாயிகள், அனைத்து துறை அலுவலர் களுக்கு தகவல் தரப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை விவசாயிகள் வந்தவாசி தாலுகா அலுவலகம் சென்றனர். அப்போது குறைதீர்வு கூட்டத்தை வேளாண்மை துறை அலுவலகத்தில் தான் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜஸ்ரீ, தாசில்தார் எஸ்.முருகன் ஆகியோர் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடப்பதாக தான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்போது திடீரென கூட்டத்தை வேளாண்மை துறை அலுவலகத்திற்கு மாற்றினால் எப்படி, அங்கு அனைத்து துறை அதிகாரிகளும் வருவார்களா?, கூட்டத்தை இங்குதான் நடத்த வேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பெ.அரிதாசு, மருதாடு மணி, கி.பால்ராஜ், ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிகாரிகள் இந்த கூட்டம் வேளாண்மை துறை அலுவலகத்தில் தான் நடக்கும் என கூறிவிட்டனர். மேலும் தாலுகா அலுவலகத்தில் கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்கவில்லை எனவும் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!