தொடங்கியது தென்மேற்கு பருவமழை

 

 

கேரளாவில் இன்று ஜூன் 8 தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக, சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 8 தொடங்குமென வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்தநிலையில் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு தீவிர கனமழையைக் குறிக்கும் அலர்ட் விடுக்கப்பட்டது.
கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களில் நாளையும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கன முதல் மிக கனமழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேரள மாநில அரசுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நேரத்தில், 35 கி.மீ., முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக கேரள மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், ” அரபிக்கடல் பகுதியில், மாலத்தீவு, லட்சத்தீவுகளில் மேகங்கள் அதிகரித்துள்ளன. கேரளாவில் பருவமழை தொடங்கிவிட்டது. மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் பருவமழை தொடங்கி விட்டது. கன மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்,” என்றார்.

296total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *