குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ள அழைப்பு

திருவண்ணாமலையில் பிப்ரவரி 6 செவ்வாய்க்கிழமை நடைபெறும் குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் குரலிசை, பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.குரலிசை, பரத நாட்டியப் போட்டிகள் காலை 10 மணிக்கும், ஓவியம், நாட்டுப்புற நடனப் போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறுகின்றன. 5 முதல் 8 வயதுக்கு உள்பட்டோர், 9 முதல் 12 வயதுக்கு உள்பட்டோர், 13 முதல் 16 வயதுக்கு உள்பட்டோர் என 3 பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
குரலிசை (வாய்ப்பாட்டு) போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தனியாக குரலிசைப் பாட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 5 நிமிடம் அனுமதி வழங்கப்படும். இசையை முறையாகப் பயின்றவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். தமிழ்ப் பாடல்கள், கர்நாடக இசைப் பாடல்கள், தேச பக்திப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும். சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை.
பரத நாட்டியம், நாட்டுப்புற நடனப் போட்டிகளில் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 5 நிமிடம் அனுமதி வழங்கப்படும். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருக்க வேண்டும். குழு நடனங்களுக்கு அனுமதி இல்லை. பக்க வாத்தியங்கள், ஒலி நாடாக்கள், குறுந்தகடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.ஓவியப் போட்டியில் பங்கேற்போர் அதற்கான தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான் வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்டிங் வகைகளில் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். இதற்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும்.

போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிகளில் இருந்து பிறந்த தேதி, வயதுக்கான சான்றை வாங்கி வர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரம் தொலைபேசியில் தெரிவிக்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பின்னர் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். போட்டிகளில் முதல் பரிசு பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளி, நெ.16, பவளக்குன்று மடாலயம், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175-223545 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!