திருமணம் செய்து ஏமாற்றிய விஏஓ… மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் போராட்டம்….

திருமணம் செய்துகொண்டு 2 முறை கர்ப்பமாக்கிய விஏஓ கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, உத்திரமேரூரில் 3வது நாளாக இளம்பெண் போராட்டம் நடத்திவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி மல்லிகா. ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களான இவர்கள் அப்பகுதியில் பள்ளி நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் நன்மதிமாறன் (25). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், உத்திரமேரூர் அடுத்த பினாயூரில் விஏஓவாக உள்ளார்.

இவர் வந்தவாசியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, தன்னுடன் படித்த வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி (25)யை காதலித்துள்ளார். இது இரு வீட்டாருக்கும் தெரிந்ததும் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்யலாம் என்று கூறியுள்ளனர். பெற்றோர் கூறியபடி இவர்களது படிப்பும் முடிந்தது. இதன்பிறகு திருமணம் செய்வது பற்றி நன்மதிமாறனிடம் மகேஸ்வரி கேட்டபோது அவர், ‘நிரந்தர வேலை கிடைக்கட்டும், அதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார். மகேஸ்வரியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்பிறகு மகேஸ்வரி வீட்டுக்கு செல்வது, இரவு வேளையில் அங்கேயே தங்குவதுமாகவும் நன்மதிமாறன் இருந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நன்மதிமாறனுக்கு விஏஓ பதவி கிடைத்தது. உத்திரமேரூர் அடுத்த பினாயூர் கிராமத்தில் பணியில் சேர்ந்தார். இதன்பிறகு மகேஸ்வரியுடன் பேசுவதை படிப்படியாக குறைத்துள்ளார். இதனால் மனம் உடைந்த மகேஸ்வரி, நன்மதிமாறனை சந்தித்து திருமணத்துக்கு வற்புறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் மகேஸ்வரியை நண்பர்கள் வீடு மற்றும் விடுதிக்கு அழைத்து சென்று 15 நாட்களாக தங்கியுள்ளார். இதன் காரணமாக மகேஸ்வரி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி நன்மதிமாறனிடம் தெரியப்படுத்தி திருமணத்துக்கு கட்டாயப்படுத்தியபோது,’இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்’ என்று சமாதானப்படுத்தி கருவை கலைத்துள்ளார்.

அதற்கு பிறகும், மகேஸ்வரி பொறுமையாக இருந்துள்ளார். ஆனால் கூறியபடி நன்மதிமாறன் நடந்து கொள்ளாததால், மனம் உடைந்த மகேஸ்வரி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவரது உறவினர்கள், வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து இருவரையும் அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, மகேஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக நன்மதிமாறன் உறுதியளித்துள்ளார். அதற்கு பிறகு திருமண பேச்சு பற்றி அவர் எதுவும் சொல்லாததால் நன்மதிமாறனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போனை எடுக்கவில்லை. வேறு ஒரு நம்பர் மூலம் போன் செய்து தொடர்பு கொண்டு, நன்மதிமாறனை வீட்டுக்கு வரவழைத்து திருமணம் பற்றி பேசியுள்ளார்.

கடந்த மே 16ம் தேதி மாம்பட்டு முத்துமாரியம்மன் கோயிலில் மகேஸ்வரிக்கும் நன்மதிமாறனுக்கும் திருமணம் நடந்தது. மறுநாள் வந்தவாசியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். அப்போது, ‘என் பெற்றோரை சமாதானப்படுத்தி விட்டு உன்னை அழைத்து செல்கிறேன்’ என்று மகேஸ்வரியிடம் கூறிவிட்டு நன்மதிமாறன் சென்றார். மாமியார் வீட்டுக்கு நன்மதிமாறன் அவ்வப்போது வந்து சென்றார். இதன் காரணமாக மகேஸ்வரி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதனிடையே இந்த திருமண விவகாரம் நன்மதிமாறனின் பெற்றோருக்கு தெரியவந்ததால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் மகேஸ்வரி வீட்டுக்கு நன்மதிமாறனை அனுப்ப பெற்றோர் மறுத்தனர்.

இந்நிலையில், கணவர் வராததால் மகேஸ்வரி போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை. வேறு ஒரு நம்பர் மூலம் போன் செய்து நன்மதிமாறனை வீட்டுக்கு அழைத்தார். அப்போது, ‘நம் திருமணத்துக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால் விவாகரத்து பெற்று விடலாம்’ என்று நன்மதிமாறன் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகேஸ்வரியை அடித்து உதைத்துள்ளார்.

இந்நிலையில், செய்யாறு கோர்ட்டில் விவாகரத்து கோரி நன்மதிமாறன் வழக்கு தொடுத்தார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜராகும்படி மகேஸ்வரிக்கு நோட்டீஸ் வந்தது. அதை பார்த்ததும் கடும் அதிர்ச்சியடைந்தார்.

ஆத்திரம் அடைந்த மகேஸ்வரி, பெருநகர் போலீசில் புகார் கொடுத்து விட்டு மானாம்பதியில் உள்ள கணவர் நன்மதிமாறன் வீட்டுக்கு சென்றார். மகேஸ்வரியை பார்த்ததும் நன்மதிமாறனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி பெருநகர் போலீசில் நன்மதிமாறனின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் விரைந்தனர். ‘இப்போது வீட்டுக்கு செல், பிறகு பார்த்து கொள்ளலாம்’ என்று கூறி மகேஸ்வரியை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்தனர். பின்னர், வீட்டை பூட்டி விட்டு தாங்கள் நடத்தும் பள்ளிக்கு நன்மதிமாறனின் பெற்றோர் சென்று விட்டனர். நன்மதிமாறனும் வீட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வந்தார். மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தி விட்டு, ‘நீ ‘உன் வீட்டுக்கு போ, இங்ேக இருக்க கூடாது’ என்று கூறியுள்ளார். அதற்கு மகேஸ்வரி, ‘எனக்கும், நன்மதிமாறனுக்கும் திருமணம் நடந்து விட்டது, அதனால் என் வீடு இதுதான், நான் செல்ல மாட்டேன்’ என்று கூறியுள்ளார். ‘அப்படி என்றால் உங்கள் ஊரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்’ என்று எச்சரித்து விட்டு இன்ஸ்பெக்டர் சென்றுள்ளார்.

கடந்த 3 நாட்களாக மழை , வெயில் பொருட்படுத்தாமல் வீட்டின் முன்பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் மகேஸ்வரி ஈடுபட்டு வருகிறார். இதுபற்றி மகேஸ்வரி கூறுகையில், ‘எனது கணவரின் பெற்றோர் ரூ.15 லட்சம் கேட்பதால்தான் என்னை ஏற்க மறுக்கிறார்கள். வாழ்ந்தால் என் கணவருடன்தான்’ என்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி: தினகரன் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!