திருவண்ணாமலையில், நேரடி ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது

திருவண்ணாமலையில், நேரடி ராணுவ ஆள் சேர்ப்பு முகாம், நேற்று துவங்கியது. முகாம், வரும், 25 வரை நடக்கிறது. சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ஆகிய, ஏழு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், இதில் பங்கேற்க உள்ளனர். முகாமில், பங்கேற்க, பதினேழரை வயது முதல், 23 வயது வரையும், கல்வித்தகுதியாக, பத்து மற்றும் பிளஸ், 2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், சோல்ஜர் ஜெனரல் பணி, டிரேட்ஸ்மேன், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வில் பங்கேற்க, 23 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், தினமும், 3,000 பேர் வீதம் முகாமிற்கு அழைக்கப்பட்டு, தேர்வு செய்யும் பணி நடக்க உள்ளது. முதல் கட்டமாக, ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வு நடந்தது. உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, மருத்துவ தேர்வும், பின், நேர்முக எழுத்து தேர்வும் நடக்க உள்ளது. அதில் தேர்ச்சி பெறுவோர், ராணுவத்தில் சேர்த்து கொள்ளப்படுவர். நேற்று துவங்கிய ஆள் சேர்ப்பு முகாமை, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே துவக்கி வைத்தார். ராணுவ உயர் அதிகாரியான பிரிகேடியர் சங்கான் தலைமையில், கர்னல் எஸ்.கே.பாட், மேஜர் நிகுஞ் ஆகியோர் கண்காணிப்பில், தேர்வு நடந்து வருகிறது.

இதுகுறித்து, கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது: ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில், நேர்மையாகவும், வெளிப்படையாகவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு நடக்கிறது. எனவே, இடைத்தரகர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். மோசடி ஆசாமிகள் குறித்த தகவல் கிடைத்தால், அவர்கள் மீது சட்டபூர்வ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலி சான்றிதழ் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட இளைஞர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு என, மூன்று நிலைகளில் ஆட்கள் தேர்வு நடத்தப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் பணியில் சேர்த்து கொள்ளப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!