இரட்டைத் திரிபு கொரோனா: இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 1.31 லட்சம்

ஆனால் நாட்டில் 1.31 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முதல் அலையின் எண்ணிக்கையைக் கடந்து புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது வைரஸ் பரவல். இதற்கு முக்கியமான காரணம் இரட்டைத் திரிபு கொரோனா என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தியாவின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 56 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கணிசமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கடந்த 9 நாட்களில் ஒரு நாள் பாதிப்பின் அளவு இரண்டு மடங்கைக் கடந்திருக்கிறது. மார்ச் மாத இறுதியில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரமாக இருந்தது, தற்போது 1.31 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இறப்புகளின் எண்ணிக்கையும் இதே விகிதத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் 354 பேர் உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 9-ஆம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 780 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் கடந்த 9 நாள்களில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. கடந்த சில நாள்களாகவே மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த இரு நாள்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. நேற்றைய நிலவரப்படி 4,276 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் பெருமளவிலான பாதிப்புக்கு இரட்டைத் திரிபு கொரோனாவே காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை இரட்டைத் திரிபு கொரோனா பரவியிருக்கலாம் என்றாலும் உறுதியான புள்ளி விவரங்கள் இல்லை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, பல்வேறு பகுதிகளிலும் தன்னுடைய இயல்பை மாற்றிக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இப்படித் திரிபடைந்த பல்லாயிரக் கணக்கான வகைகள் விஞ்ஞானிகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் உலகில் வேறு எங்கும் இல்லாத இரட்டைத் திரிபு கொரோனா மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது ஒரே வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பாற்றலில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டதாகவும் உருப்பெற்றிருக்கிறது. இந்த வகைக்கு B.1.617 என விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள்.

Leave a Comment