டோக்யோ ஒலிம்பிக் பெண்கள் சாஃப்ட்பால் போட்டியில் முதலிடத்துக்கு வந்த மியூ கோட்டோ என்ற ஜப்பானியரின் தங்கப் பதக்கத்தை அவரது சொந்த நகரான நகோயா நகர மேயர் கடித்துவிட்டதால், அவருக்கு வேறு பதக்கம் மாற்றித்தர ஒப்புக்கொண்டது ஒலிம்பிக் கமிட்டி.

பெண்கள் சாஃப்ட்பால் போட்டியில் அமெரிக்காவை ஜப்பான் வீழ்த்தியதை கொண்டாடுவதற்காக கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகோயா நகர மேயர் தகாஷி கவாமுரா தன்னுடைய முகக் கவசத்தை தாழ்த்தி, அந்த தங்கப் பதக்கத்தை வாயில் வைத்து கடித்தார்.

கோவிட் 19 கட்டுப்பாடுகளை மீறியதாகவும், மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இது சுகாதாரக் கேடான செயல் என்றும், தங்கப் பதக்கம் வென்ற மியூ கோட்டோவை அவமதித்த செயல் என்றும் சமூக ஊடகத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கிருமி பதக்கம் என்று பொருள்தரும் “Germ medal” என்ற சொற்றொடர் ஜப்பானிய சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆனது. கோட்டோ விளையாடும் அணியின் உரிமையாளரான டொயோட்டோகூட இந்த செயலை ‘பொருத்தமற்றது’, ‘வருந்தத்தக்கது’ என்று விமர்சித்தது. 72 வயது மேயர் தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். மேயர் என்ற தம்முடைய நிலையை மறந்து மிகவும் பொருத்தமற்ற முறையில் நடந்துகொண்டதாக கூறிய அவர், அந்த பதக்கத்தை மாற்றித் தருவதற்கான செலவை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

இந்நிலையில், அவர் கடித்த பதக்கத்தை மாற்றி புதிய பதக்கம் வழங்க டோக்யோ ஒலிம்பிக் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இதற்கான செலவை ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதக்கங்களை கடிப்பது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், அந்தப் பதக்கத்தை வென்றவர்தான் கடிப்பார். இந்த சம்பவத்தை வைத்து, டோக்யோ ஒலிம்பிக் கமிட்டியினர் டிவிட்டரில் ஒரு ஜோக் அடித்தனர்.