இந்திய அரசுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் பணமாக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் என்ன நடக்கப் போகிறது?

National Monetisation Pipeline என்ற திட்டத்தை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23ஆம் தேதி டெல்லியில் வெளியிட்டார். அதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குச் சொந்தமாகவும் பொதுத் துறை நிறுவனங்கள் வசமும் உள்ள 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன.

இதில் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளடங்கிய போக்குவரத்துக் கட்டமைப்புகள், மின் உற்பத்தி நிலையங்கள், மின் பாதைகள், குழாய் பாதைகள், நிலங்கள், கட்டடங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

தனியாரிடம் அளிக்கப்படவுள்ள சொத்துகளில் 66 சதவீதம் சாலைகள், ரயில்வே, மின்சாரத் துறையைச் சேர்ந்ததாக இருக்கும். மீதமுள்ள 34 சதவீதம், விமான நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், துறைமுகங்கள் போன்றவையாக இருக்கும். சாலைகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் 2025ஆம் நிதியாண்டிற்குள் 1.6 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 26,700 கி.மீ தூரமுள்ள சாலைகள் இதற்குப் பயன்படுத்தப்படும். இது, இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 22 சதவீதமாகும். முதல் கட்டமாக ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், பிகார் மாநிலங்களில் உள்ள 586 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.