கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ஹைக்கூ கவிதை நூலுக்கு இரண்டாம் பரிசு

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ஹைக்கூ கவிதை நூலுக்கு சென்னையில் செயல்படும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு நேற்று சென்னை கன்னிமாரா நூலக வாசகர் வட்டத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு முனைவர் இராம.குருநாதன் தலைமையேற்றார். அனைத்திந்திய எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் முனைவர் இதயகீதம் இராமானுஜம் அனைவரையும் வரவேற்றார்.

கடந்த 2016- 2017-ஆம் ஆண்டுகளில் தமிழில் வெளியான ஹைக்கூ கவிதை நூல்களில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு பாராட்டுக் கேடயமும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.

வந்தவாசியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேஷ் எழுதிய ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஹைக்கூ கவிதை நூல் இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு, சாகித்திய அகாதெமியின் தமிழக பொறுப்பு அலுவலர் அ.சு.இளங்கோவன் பாராட்டுக் கேடயத்தையும் ரூ.2000/- பரிசுத் தொகையையும் வழங்கிச் சிறப்பித்தார்.

கவிஞர் மு.முருகேஷ் இதுவரை 38-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கிய, விமர்சன நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இள முனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.முருகேஷ் எழுதிய 160 ஹைக்கூ கவிதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘நிலா முத்தம்’ எனும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இவரது ஹைக்கூ கவிதைகள் ஹைக்கூ குறும்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் நடைபெற்ற உலக ஹைக்கூ கிளப் 9-ஆவது மாநாட்டில் நடத்தப்பட்ட ஹைக்கூ கவிதைப் போட்டியில் இவர் எழுதிய ஹைக்கூ என்று வெற்றிபெற்று, உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்ப்பட்டுள்ளது.
இவரது தொடர் ஹைக்கூ செயல்பாடுகளுக்காக குவைத் நாட்டில் இயங்கும் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் ‘குறுங்கவிச் செல்வர்’ எனும் விருதினை 2016-ஆம் ஆண்டு வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பாராட்டுதழ்களையும் தனது படைப்புகளுக்காகப் பெற்றுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் முனைவர் கோ.பெரியண்ணன், இலக்கிய வீதி இனியவன், கவிஞர் கார்முகிலோன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!