3 தனியார் ஸ்கேன் மையங்களின் அறைகளுக்கு மத்திய சுகாதாரக் குழுவினர் “சீல்”

திருவண்ணாமலையில் சட்ட விரோத கருக் கலைப்பு, கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் தெரிவித்தது தொடர்பான புகார்களின் அடிப்படையில், தனியார் மருத்துவமனை, 3 தனியார் ஸ்கேன் மையங்களின் அறைகளுக்கு மத்திய சுகாதாரக் குழுவினர் வியாழக்கிழமை “சீல்” வைத்தனர்.
திருவண்ணாமலையில் உள்ள ஸ்கேன் மையங்களில் அதிக பணத்தை பெற்றுக்கொண்டு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது கண்டறிந்து சொல்லப்படுவதாகவும், கருவில் இருப்பது பெண் குழந்தையாக இருந்தால் எங்கு சென்று கருக் கலைப்பது என்பது குறித்தும் அவர்களே சொல்லி அனுப்புகிறார்கள் என்றும் மத்திய சுகாதாரத் துறைக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன.இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறையின் சார்புச் செயலரும், கண்காணிப்புக் குழுவின் தலைவருமான அஜய்குமார், கண்காணிப்புக் குழு உறுப்பினர் சுதேஷ் ஜோஷி, சென்னை மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சுந்தரி, கூடுதல் இயக்குநர் ருக்மணி, மருத்துவத் துறை விஜிலென்ஸ் துணைக் கண்காணிப்பாளர் தாமஸ் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தனர்.
ஸ்கேன் மையங்களில் ஆய்வு: இதையடுத்து, திருவண்ணாமலை, சன்னதி தெருவில் உள்ள 3 தனியார் ஸ்கேன் மையங்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, இந்த மையங்களில் அதிக பணத்தை பெற்றுக்கொண்டு சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிவித்து வந்தது தெரியவந்தது.

மருத்துவமனையில் திடீர் ஆய்வு: இதையடுத்து, திருவண்ணாமலை திருவூடல் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு அறையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்யச் சென்றபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை அந்த மருத்துவமனையின் மருத்துவர் செல்வாம்பாள் ஊழியர்களிடம் கொடுத்து வெளியே எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

இதை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்த ஊழியர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இந்த ஆவணங்களை பரிசோதித்தபோது, கடந்த சில மாதங்களில் 500-க்கும் மேற்பட்டோருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனை விவரங்கள் அடங்கிய தகவல்கள் இருந்தனவாம்.
இவற்றில், 300-க்கும் மேற்பட்ட பெண்களின் ஸ்கேன் அறிக்கையில் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதற்கான பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு இருந்தனவாம். எனவே, இந்த 300-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளும் கரு கலைப்பு செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்யும் பணியை மத்திய சுகாதாரக் குழு தொடங்கி உள்ளது. 300-க்கும் மேற்பட்ட பெண்களின் விலாசங்களைக் கண்டுபிடித்து வீடு, வீடாகச் சென்று விசாரணை நடத்தவும் அதிகாரிகள் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மருத்துவமனைக்கு “சீல்”: மேலும், தம்பதிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விரோத கரு கலைப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் சிக்கியதையடுத்து, திருவூடல் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையை முழுமையாக மூடி அதிகாரிகள் குழுவினர் “சீல்’ வைத்தனர்.
3 ஸ்கேன் மையங்களின் அறைகளுக்கு “சீல்” வைப்பு: இதேபோல, திருவண்ணாமலை, சன்னதி தெருவில் உள்ள 3 ஸ்கேன் மையங்களிலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அறைகளுக்கு அதிகாரிகள் குழுவினர் “சீல்” வைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை இந்த ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து, மேலும் சில நாள்களுக்கு மத்திய சுகாதாரக் குழுவினர் திருவண்ணாமலையிலேயே தங்கியிருந்து கருக் கலைப்பு செய்யப்பட்ட பெண்களின் வீடுகளுக்குச் சென்று தனித்தனியே விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!