வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காய்ச்சலால் மக்கள் அவதி..

வந்தவாசி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். இந்தக் காய்ச்சல் மர்மக் காய்ச்சலா என்பது குறித்து சுகாதாரத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வந்தவாசி நகரில் பொட்டிநாயுடு தெரு, கவரைத் தெரு, ஐந்து கண் பாலம் அருகில் உள்ளிட்ட பல்வேறு தெருக்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 20 நாள்களாக காய்ச்சல் காரணமாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று திரும்புகின்றனர்.

இதேபோல, வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு, தென்சேந்தமங்கலம், பாதூர், உளுந்தை, சென்னாவரம், பாதிரி, குறும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனை மற்றும் வழூர், கொவளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைப் பெற்று திரும்புகின்றனர். இவர்களில் சிலர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், பாதூர் கிராமத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அந்தக் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இவர்களில் சிலருக்கு கால்களில் வீக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி, வந்தவாசி வட்டார மருத்துவக் குழுவினர் கடந்த ஒரு வாரமாக பாதூர் கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அந்தக் கிராமத்தில் சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண காய்ச்சல் தான்’: இதுகுறித்து வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி கூறியதாவது:

தற்போது ஏற்பட்டுள்ள காய்ச்சல் சளி, இருமலுடன் வழக்கமாக வரும் காய்ச்சல் ஆகும். வந்தவாசி வட்டார கிராமங்களுக்கு நேரில் சென்று காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 5 மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதையொட்டி, கிராமங்களில் ஒட்டுமொத்த தூய்மை இயக்கம் நடத்தி வருகிறோம். அதன்படி, சனிக்கிழமை சென்னாவரத்தில் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பணியின்போது, வீடுகளில் தேவையற்று உள்ள டயர்கள், பானைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. மேலும், அனைத்துத் தெருக்களிலும் கொசு ஒழிப்புப் புகை மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதுவரை யாரிடமும் டெங்கு நோய்க்கான அறிகுறி காணப்படவில்லை என்றார்.

டெங்கு அறிகுறி இல்லை‘: இதுகுறித்து வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவப்பிரியா கூறியதாவது:
வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக நாள் ஒன்றுக்கு 400-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இவர்களில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்கள்.

இவர்களை பரிசோதித்து தேவைப்படின் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து அனுப்புகிறோம். இதுவரை டெங்கு அறிகுறி எதுவும் இல்லை என்றார்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!