மகன் சாவில் சந்தேகம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் தீக்குளிக்க முயற்சி

வந்தவாசியில் ஆட்டோ டிரைவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது என்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தாய், தந்தை இருவரும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டோ டிரைவர்
வந்தவாசி டவுன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜி. இவருடைய மனைவி சந்திரா. இவர்களுடைய மகன் விமல்ராஜ் (வயது 25), ஆட்டோ டிரைவர்.

கடந்த 9–ந்தேதி மனைவியுடன் விமல்ராஜ் தெருவில் நடந்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் கேலியும், கிண்டலும் செய்ததுடன், தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனை விமல்ராஜ் தட்டி கேட்டபோது அவரை 3 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் விமல்ராஜ் 11–ந் தேதி இரவு வீட்டின் பின்புறம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் அங்கு சென்று விமல்ராஜின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விமல்ராஜின் தந்தை ராஜி போலீசில் கொடுத்த புகாரில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை 10–30 மணியளவில் விமல்ராஜின் தந்தை ராஜி, தாயார் சந்திரா ஆகியோர் வந்தவாசி பழைய பஸ்நிலையம் முன்பு தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு இருந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச் சென்று அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

தகவல் அறிந்ததும் வந்தவாசி தெற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், சம்பத் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம், விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

செய்தி: தினத்தந்தி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!