வந்தவாசி அருகே கல்லூரி மாணவி கழுத்து நெரித்து கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பொறியியல் மாணவி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவர், சென்னாவரம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்கும் பணியாளராக உள்ளார். இவரது மனைவி ருக்குமணி, வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக உள்ளார். இவர்களது மகள் ராஜேஸ்வரி (21), வந்தவாசி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் இறுதியாண்டு படித்து வந்தார். ருக்குமணிக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில், அவருக்குப் பதிலாக ராஜேஸ்வரி வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று துப்புரவுப் பணியில் ஈடுபடுவாராம்.

இந்த நிலையில், கல்லூரி விடுமுறையில் இருந்த ராஜேஸ்வரி, சனிக்கிழமை காலை தனது தாய்க்குப் பதிலாக, வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவுப் பணி செய்யச் சென்றாராம். பின்னர், அவர் வீடு திரும்பவில்லை.


இந்த நிலையில், அந்தக் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூட மொட்டை மாடியில் ராஜேஸ்வரி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் பொற்செழியன், வந்தவாசி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமால் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், ராஜேஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ராஜேஸ்வரி கடைசியாக அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது பெரியப்பா மகன் ராஜாவுடன் (32) சமுதாயக் கூட மாடிப்படியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ராஜாவை போலீஸார் தேடியபோது, அவர் அந்தக் கிராம ஏரிக்கரையில் விஷம் அருந்திய நிலையில் மயங்கிக் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ராஜாவை வந்தவாசி அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வந்தவாசி தெற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி: தினமணி & நியூஸ்18 தமிழ்நாடு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!