செய்யாறில் தமிழகத்திலேயே முதல் குளிரூட்டப்பட்ட ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு

தமிழகத்தில் முதன் முறையாக குளிரூட்டப்பட்ட அறைகள் (ஏ.சி), லிப்ட் வசதியுடன் கூடிய ரூ.7.5 கோடி மதிப்பில் செய்யாறில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா திறந்து வைத்தார். ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நீதிபதிகள் குடியிருப்புகளை சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றோரை திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி ஜி.தன்ராஜ் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் பேசியதாவது:
தமிழகத்திலேயே முதன் முறையாக குளிரூட்டப்பட்ட அறைகள், லிப்ட் உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் செய்யாறில் கட்டப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இருந்து கட்டப்பட்டுள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வழக்குகளை விரைவாக முடித்து வைக்க நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் பாடுபட வேண்டும். அதற்கு வழக்குரைஞர்கள் வாய்தா வாங்காமல் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதேபோல, நீதிபதிகளும், நீதிமன்றப் பணியாளர்களும் ஒத்துழைப்பு அளித்து உதவிட வேண்டும் என்றார். இதே கருத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலாவும் வலியுறுத்திப் பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியாதாவது: தமிழகத்தில் முதன் முதலாக அனைத்து வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ள செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர்கள் இனி நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்ய மாட்டோம், வழக்குகளை தாமதமின்றி விரைந்து முடிக்க உதவிடுவோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும். நீதிமன்ற புறக்கணிப்பு செய்யாமல் தமிழகத்துக்கே முன்னுதாரணமாக செய்யாறு நீதிமன்றம் விளங்க வேண்டும் என்றார்.
விழாவில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவர் ஆர்.நராஜா, ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் ஏழுமலை, செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன், சார் – ஆட்சியர் த.பிரபுசங்கர், வட்டாட்சியர் வி.ஜெயராமச்
சந்திரன், பொதுப்பணித் துறை தொழில்நுட்பப் பொறியாளர் மதிவாணன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் டி.ஜி.மணி, ஜானகிராமன் மற்றும் மாவட்டத்தில் இருந்து பல்வேறு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யாறு நீதிபதிகள் கீதாராணி, ஜெய்சங்கர், யஷ்வந்ராவ் இந்தர்சால் மற்றும் செய்யாறு வழக்குரைஞர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
ஆரணி: இதேபோல, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற (விரைவு நீதிமன்றம்) திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை வகித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், என்.கிருபாகரன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி ஜி.தன்ராஜ், மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவர் ஆர்.நராஜா, ஆரணி நீதிபதிகள் எழில்வேலவன், இந்திரா காந்தி, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி ஏழுமலை, செய்யாறு எம்எல்ஏ தூசி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, சார் – ஆட்சியர் டி.பிரபுசங்கர், ஆரணி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.தனஞ்செயன் மற்றும் வழக்குரைஞர்கள் க.சங்கர், சிகாமணி, வி.வெங்கடேசன், ராஜமூர்த்தி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!