திருவண்ணாமலை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் ஆய்வு

சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. எனவே தமிழ்நாட்டில் அரசு, புறம்போக்கு, ஏரி, குளங்கள் மற்றும் தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அடியோடு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுநல வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு சீமைக்கருவேல மரங்களை 2 மாதத்துக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட ஐகோர்ட்டு மூத்த வக்கீல்கள் அடங்கிய ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது. ஆய்வு குழுவை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை பார்வையிட்டு வருகின்றனர்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் புளியரம்பாக்கம், பழந்தை, போளூர், கடலாடி, நெடுங்காம்பூண்டி, அத்தியந்தல், சாத்தனூர், முன்னூர்மங்கலம், கீழ்பென்னாத்தூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை நேற்று முன்தினம் வக்கீல் சதீஷ் தலைமையில் வக்கீல்கள் சுப்பிரமணியன், புஷ்பாகரன், ஜெயா, மகேஸ்வரி, ஜெயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், ஆய்வு குழுவினர் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பழனி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சீமைக்கருவேல மரங்களின் கணக்கெடுப்பு விவரம், அகற்ற மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு நடந்தது. சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியின் முன்னேற்ற அறிக்கையை தினமும் பெற்று விரைவுப்படுத்தி வருவதாகவும், வருகிற ஏப்ரல் (அடுத்த மாதம்) 30–ந் தேதிக்குள் திருவண்ணாமலை மாவட்டத்தில் முற்றிலுமாக சீமை கருவேல மரங்கள் அகற்றப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் பழனி தெரிவித்தார்.
13,168 ஹெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகளில் 2,856 ஹெக்டர், 10 பேரூராட்சிகளில் 2,435 ஹெக்டர், 4 நகராட்சிகளில் 65 ஹெக்டர், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் 989 ஹெக்டர், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் 7,841 ஹெக்டர், வனத்துறை பராமரிப்பு பகுதிகளில் 103 ஹெக்டர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 14,291 ஹெக்டர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாகவும், அவற்றில் கடந்த 9–ந் தேதி வரை 1,123 ஹெக்டர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் ஆய்வுக்குழுவினர் கூறுகையில், சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் பொதுமக்கள் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும். மீதமுள்ள 13,168 ஹெக்டர் பரப்பளவிலான சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் கூறியதை போல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30–ந் தேதிக்குள் மீதமுள்ள 13,168 ஹெக்டர் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறினார்கள்.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை ஆய்வு குழுவினர் பார்வையிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!