சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 60 வாகனங்கள் வரும் 9-ஆம் தேதி பொது ஏலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 60 வாகனங்கள் வரும் 9-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இயங்கும் மது விலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில், அண்மைக்காலமாக சாராய வழக்குகளில் தொடர்புடைய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் வரும் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடைபெறும். ஏலத்தில் கலந்துகொள்வோர் நுழைவுக் கட்டணமாக ரூ.100, முன்பணமாக ரூ.1,000 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
வரும் 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் 9-ஆம் தேதி காலை 10 மணி வரை நுழைவுக் கட்டணம், முன்பணத்துக்கான ரசீது வழங்கப்படும். வாகனம் ஏலம் எடுக்காதவர்களுக்கு முன்பணம் திரும்ப அளிக்கப்படும். வாகனங்களை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 14 சதவீத விற்பனை வரி, அந்த விற்பனை வரிக்கு 5 சதவீத சேவை வரி சேர்த்து உடனே செலுத்த வேண்டும்.
இதற்கான ரசீது உடனே வழங்கப்படும். பதிவு எண், என்ஜின் எண், சேசிஸ் எண் இல்லாத வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய இயலாது. ஏலம் எடுத்த வாகனத்துக்கான ரசீது மட்டுமே அந்த வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.
மேலும் விவரங்களுக்கு மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். 04175-233920 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!