வந்தவாசி கேசவா நகரில் 20 நாள்களாக தெரு விளக்குகள் பகலிலும் எரிந்து வருகின்றன

வந்தவாசி கேசவா நகரில் கடந்த 20 நாள்களாக சுமார் 15-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் பகலிலும் எரிந்து வருகின்றன.
இதனால், மின்சாரம் வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வந்தவாசி சன்னதி தெருவில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் உள்ள 500 கே.வி.ஏ. மின்மாற்றி மூலம் கேசவா நகர், கே.ஆர்.கே. தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கேசவா நகரில் அடிக்கடி மின் அழுத்த பிரச்னை ஏற்பட்டதால், இந்த நகருக்கு உள்பட்ட பாலகிருஷ்ணன் தெரு, அகத்தியர் தெரு மற்றும் அதன் விரிவு பகுதிகளுக்கென ரூ.5.20 லட்சம் செலவில் புதிதாக 100 கே.வி.ஏ. மின்மாற்றி கடந்த 20 நாள்களுக்கு முன் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த புதிய மின்மாற்றிக்கு உள்பட்ட நகராட்சி தெரு விளக்குகளை இயக்க நகராட்சி சார்பில் தனி கட்டுப்பாட்டு சுவிட்ச் அமைக்கப்படவில்லையாம். இதனால் தெருமின் விளக்குகளை காலையில் அணைக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கேசவா நகரில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது முதல் கடந்த 20 நாள்களாக சுமார் 15-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் இரவு பகலாக எரிந்து வருகின்றன.
பகலிலும் தெரு விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாவதாக நகராட்சியில் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

செய்தி: தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!