திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,889 மாணவர்கள் +2 தேர்வு எழுதுகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், 81 தேர்வு மையங்களில் 27,889 மாணவ – மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர்.

முறைகேடுகளை தடுக்க கூடுதல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு,  வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி, பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். காலை 10 மணி முதல் 10.15 மணிவரை வினாத்தாளை மாணவர்கள் படித்துப்பார்க்கவும், தேர்வு பதற்றத்தை தவிர்க்கவும் சிறப்பு நேரம் ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 211 மேல்நிலைப்பள்ளிகளில், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 53 மையங்கள், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 28 பள்ளிகள் உள்பட மொத்தம் 81 பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் 13,388 மாணவர்கள், 14,501 மாணவிகள் உள்பட மொத்தம் 27,889 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஏற்கனவே செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. தேர்வுக்கான நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, 10 மையங்களுக்கு ஒரு பறக்கும் படை வீதம் மொத்தம் 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மெட்ரிக் ஆய்வாளர் ஆகியோரும் தேர்வு மையங்களை கண்காணிக்க உள்ளனர். மேலும், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு கட்-ஆப் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் பாடங்களுக்கான தேர்வுகளின்போது, அண்ணா பல்கலைக் கழக குழுவினரும் கண்காணிக்க உள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் தனித்தனியே நிலையான கண்காணிப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேர்வு அறை கண்காணிப்பாளராக பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, நேற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தேர்வு மையத்துக்கு காலை 8.45 மணிக்குள் செல்ல வேண்டும், செல்போன்களை தேர்வு மைய கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்க வேண்டும், தகவல் பறிமாற்றத்துக்கு பள்ளியில் உள்ள தொலைபேசியை (லேண்ட் லைன்) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சிஇஓ ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஒரு எஸ்ஐ தலைமையில் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாக்ஸ் மாணவர்கள் ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ – மாணவிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும், உளவியல் ஆலோசனைகள் வழங்கவும், கட்டணமில்லா தொலைேபசி சேவை வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1800-121-7030 என்ற தொலைபேசி எண்ணை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை தொடர்பு கொண்டு, தேர்வு மற்றும் பாடங்கள் தொடர்பான தங்களுடைய சந்தேகங்களை மாணவர்கள் தீர்த்துக்கொள்ளலாம். முதன்முறையாக, இந்த வசதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

4 thoughts on “திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,889 மாணவர்கள் +2 தேர்வு எழுதுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!