வந்தவாசி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை

வந்தவாசி அருகே கண்டவரட்டி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் அந்தக் கடையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

கண்டவரட்டி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையில் மது அருந்துபவர்களால் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனராம். இதனால் அந்தக் கடையை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 2-ஆம் கட்டமாக 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இந்தப் பட்டியலில் கண்டவரட்டி மதுபானக் கடை இடம்பெறவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், டாஸ்மாக் மதுபானக் கடையை வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உடனடியாக கண்டவரட்டி மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
தகவலறிந்து அங்கு சென்ற பொன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரதாப்சந்திரன் தலைமையிலான போலீஸார், இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, அந்த மதுபானக் கடை சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!