வந்தவாசி அருகே நீர்நிலை புறம்போக்கு இடத்துக்கு பட்டா வழங்க மறுப்பு: அரசு அலுவலர்களை பூட்டி சிறை வைத்த மக்கள்

வந்தவாசி அருகே நீர்நிலை புறம்போக்கு இடத்துக்கு பட்டா வழங்க மறுத்த அரசு அலுவலர்களைப் பூட்டி பொதுமக்கள் சிறை வைத்தனர்.
வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் உள்ள குளக்கரையில் 12 பேர் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வசித்து வரும் பகுதிக்கு பட்டா வழங்கக் கோரி விண்ணப்பித்தபோது, நீர்நிலை புறம்போக்கு இடத்துக்கு பட்டா வழங்க இயலாது என வருவாய்த் துறையினர் தெரிவித்தனராம்.
இந்நிலையில், அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, 12 பேரும் மீண்டும் பட்டா கோரி, முகாம் அலுவலரும், வட்ட வழங்கல் அலுவலருமான சங்கரனிடம் மனு அளித்தனராம்.
இதற்கு சங்கரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் நீர்நிலை புறம்போக்கு இடத்துக்கு பட்டா வழங்க இயலாது என்று தெரிவித்தனராம்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அலுவலகத்தை பூட்டி சங்கரன், ஆனந்தகுமார் ஆகிய இருவரையும் சிறை வைத்தனர். தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி வட்டாட்சியர் முருகன், 12 குடும்பத்தினருக்கும் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, அவர்கள் பூட்டை திறந்து அலுவலர்களை விடுவித்தனர்.
இதையடுத்து, 12 பேருக்கும் மாற்று இடம் வழங்குவதற்காக அந்தக் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் வட்டாட்சியர் முருகன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அரசு அலுவலர்களை பூட்டி சிறை வைத்தது தொடர்பாக வந்தவாசி வடக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!