உஷார் ! வந்தவாசியில் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாகக் கூறி, 2 பேரிடம் நூதன மோசடி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாகக் கூறி, 2 பேரிடம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வந்தவாசியை அடுத்த தக்கண்டராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்பாஷா. இவர், ஏடிஎம் அட்டை மூலம் பணம் எடுப்பதற்காக வந்தவாசியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு திங்கள்கிழமை வந்தார். அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாது என்பதால், அங்கிருந்த இளைஞரிடம் ஏடிஎம் அட்டை, ரகசிய எண்ணைக் கூறி பணம் எடுத்துத் தரும்படி தெரிவித்தாராம். இதையடுத்து, பணம் எடுப்பதுபோல பாவனைசெய்த அந்த இளைஞர், பணம் வரவில்லை என்று கூறி ஜான்பாஷாவிடம் அட்டையைத் திருப்பி அளித்துவிட்டாராம்.

பின்னர், வீடு திரும்பிய ஜான்பாஷாவுக்கு வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2,300 எடுக்கப்பட்டதாக செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், ஏடிஎம் அட்டையை எடுத்து பார்த்தபோது அது தன்னுடையது இல்லை என்பதும், அந்த இளைஞர் அட்டையை மாற்றிக் கொடுத்து பணத்தை திருடியதும் தெரியவந்தது.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்த பூங்காவனம் மனைவி செங்கணி. இவர், கடந்த வெள்ளிக்கிழமை இதே ஏடிஎம் மையத்துக்கு சென்று அங்கிருந்த இளைஞர் ஒருவரிடம் ஏடிஎம் அட்டையைக் கொடுத்து பணம் எடுத்துத் தரும்படி கேட்டாராம். அந்த இளைஞர் பணம் வரவில்லை என்று கூறி, ஏடிஎம் அட்டையைக் கொடுக்கவே வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.49 ஆயிரத்துக்கு நகை, மளிகைப் பொருள்கள் வாங்கியதாக செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து, தனது ஏடிஎம் அட்டையை எடுத்து பார்த்தபோது, அது வேறு ஏடிஎம் அட்டை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜான்பாஷா, செங்கணி ஆகியோர் அளித்த தனித்தனி புகார்களின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குகள் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!