உளுந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள், பாசனக் கருவிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உளுந்து பயிரிடும் விவசாயிகள் மானிய விலையில் இடுபொருள்கள் மற்றும் பாசனக் கருவிகளை வாங்கிப் பயனடையலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டத்தை தமிழக அரசு, வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் கிடைக்கும் பாசன நீரைக் கொண்டு அதிக பரப்பளவில் பயறு வகைகளை சாகுபடி செய்ய ஏதுவாக சிறப்புத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க 3,250 ஏக்கரில் செயல்விளக்கத் தளைகள் ரூ.65 லட்சத்திலும், நுண்ணீர்ப் பாசன கருவிகளான தெளிப்பு நீர்ப் பாசனம், மழை தூவான் ஆகியவை ரூ.192.80 லட்சத்திலும் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் இடுபொருள்கள் இலவசமாக வழங்கப்படும். நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படும்.
எனவே, உளுந்து பயிரிட விரும்பும் நீர்ப்பாசன வசதி மற்றும் மோட்டார் வசதியுள்ள விவசாயிகள் உடனே விண்ணப்பிக்கலாம்.

சிறு, குறு விவசாயிகள், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மற்றும் மகளிர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். செயல் விளக்கத் தளைகள் அமைக்க நிலத்தின் சிட்டா அடங்கல், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை நகல், நில வரைபடம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை 04175-295539 என்ற எண்ணிலும், திருவண்ணாமலை வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகத்தை 9994251571 என்ற எண்ணிலும், திருவண்ணாமலை வேளாண் அலுவலரை 8973206884 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
எனவே, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!