வந்தவாசியில் 3 ஆண்டுகளாக அமைக்கப்படாத சாலை: பொதுமக்கள் அவதி

வந்தவாசி நகராட்சி, 17-ஆவது வார்டுக்கு உள்பட்ட கேசவா நகரில் புதிய சாலை அமைப்பதற்காக தார்ச்சாலை தோண்டப்பட்டு, 3 ஆண்டுகளாக பணிகள் தொடங்கப்படாததால், பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வந்தவாசி நகராட்சி, 17-ஆவது வார்டுக்கு உள்பட்ட கேசவா நகரில் ஜனார்த்தன முதலி தெரு, பாலகிருஷ்ணன் தெரு, அகத்தியர் தெரு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஜனார்த்தன முதலி தெருவில் 3-ஆவது குடிநீர் திட்ட குழாய் புதைப்பதற்காக தார்ச்சாலை தோண்டப்பட்டது.
இதையடுத்து, இந்த சாலை மேடும், பள்ளமுமாக மண் சாலையாக மாறியது. பின்னர், இந்தச் சாலையை தாற்காலிகமாக சீரமைக்கக்கூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கேசவா நகரின் நுழைவு சாலையான இந்த தெரு வழியாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சிரமத்துடன் சென்று வரும் சூழ்நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய சிமென்ட் சாலை அமைப்பதற்காக இந்தச் சாலையில் இரு இடங்களில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. மேலும், ஒரு இடத்தில் மணலுக்கு பதில் ஜல்லிமாவு கொட்டப்பட்டது.
ஆனால், 6 மாதங்கள் கழிந்த பின்னரும் சாலை அமைப்பதற்கான எந்த அடிப்படை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கொட்டப்பட்ட ஜல்லிகற்கள் சாலையை அடைத்துக் கொண்டதால் இந்தச் சாலையை பயன்படுத்துவதில் பொதுமக்களுக்கு மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் ஜல்லிக்கற்கள் மீது விழுந்து காயமடைகின்றனர். மேலும், கொட்டப்பட்ட ஜல்லிமாவும் இறுகி மேடாக ஆகிவிட்டதால் நான்கு சக்கர வாகனங்கள் இந்தச் சாலையில் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே, வந்தவாசி கேசவா நகரில் உள்ள ஜனார்த்தன முதலி தெரு உள்பட அனைத்து தெருக்களிலும் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!