கருகிய பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? திருவண்ணாமலை விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாறு காணாத கடும் வறட்சி நிலவுகிறது. பருவமழை பொய்த்தும், காலதாமதமாக பெய்யும் என காத்திருந்த விவசாயிகளை வருண பகவானும் கைவிட்டார். நீர் நிலைகளால் கிடைத்து வந்த பாசன வசதியும் கடந்த 2 ஆண்டுகளாக இல்லை. கிணறுகள் வறண்டது.

800 அடி ஆழத்திற்கு போர்வெல் போட்டாலும், தண்ணீர் ஒரு சொட்டு கூட கிடைப்பதில்லை. சொட்டு நீர் பாசனம் மட்டுமே சிறிதளவு கைகொடுத்தது. வார்த்தா புயலின் கோர தாண்டவம் விவசாயிகளை திக்குமுக்காட செய்தது. பல்லாயிர ஏக்கர் கரும்பு, வாழைகள் சாய்ந்து விழுந்தன.

தண்ணீரின்றி வறட்சியால் நெல், கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் கருகி காய்ந்தன. விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு வறட்சி பாதிப்பு நிலவுகிறது. இது ஒருபுறம் விவசாயிகளை வாட்டி வதைக்க பணப்பயிரான மஞ்சள் நோய் தாக்கி மடிக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், குறிப்பாக ஆரணி, கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள அம்மாபாளையம், கொங்கராம்பட்டு, அழகுசேனை, கீழ் அரசம்பட்டு போன்ற இடங்களில் கடந்த ஆண்டு வரை 1000 ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டது.

அப்போது ஒரு ஏக்கருக்கு 100 மூட்டை மஞ்சள் அறுவடை செய்யப்படும். ஒரு ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் வரை விவசாயிகள் செலவிடுவர். இந்தாண்டு நிலவும் வறட்சி காரணமாக ஆரணி, கண்ணமங்கலம் பகுதியில் 3-ல் ஒரு பங்கு மட்டுமே மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.

சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் நோய் தாக்கியதால் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. வறட்சி பாதிப்பு ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் விட்டு வைக்கவில்லை. கால் நடைகளுக்கு தேவையான பசுந்தீவனமும் தண்ணீரின்றி கருகியது.

தீவனம் கிடைக்காமல் கால்நடைகளும் ஒருசில இடங்களில் இறந்தன. இந்த அவலநிலையை தொடர்ந்து, ஆடு, மாடுகளை காப்பாற்ற விவசாயிகள் கருகி காய்ந்த நெல் உள்ளிட்ட பயிர்களை தீவனமாக்கினர். பல்லாயிர ஏக்கரில் கருகிய நெல் பயிர்களில் மாடுகளை மேய விட்டுள்ளனர்.

குறிப்பாக ஆரணி ஆகாரம், விண்ணம்மங்கலம், நடுப்பட்டு, தச்சூர், மேலானூர் போன்ற கிராமங்களில் 500 ஏக்கர் விவசாய நிலங்களில் கருகிய நெல் பயிர்கள் மாடுகளுக்கு உணவாகின. இந்த சூழலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சி கொடுமையால் விவசாயிகள் பலி 4 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மண்ணு என்ற விவசாயியே வறட்சிக்கு முதல் பலியானார். செங்கம் தோக்கவாடியை சேர்ந்த தங்கவேலு, போளூர் சோமந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த அதியன் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

இந்த நிலையில், மேலும் ஒரு விவசாயி உயிரை வறட்சி கொடுமை பறித்து சென்றது. கலசப்பாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் பொற்குணம் ஊராட்சி மதுரா காரப்பள்ளத்தை சேர்ந்த பழனி (வயது 37) என்ற விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம் கிணற்று பாசனத்துடன் உள்ளது.

தனது நிலத்தில் பழனி உளுந்து பயிர் சாகுபடி செய்திருந்தார். பருவமழை பொய்த்ததால் கிணற்றில் நீர் வற்றி உளுந்து பயிர் கருகியது. இதனால் மன உளைச்சலில் இருந்த விவசாயி பழனி நேற்று நிலத்திற்கு சென்ற போது கருகிய பயிர்களை பார்த்து கதறி அழுதார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் விவசாயி பழனி சுருண்டு விழுந்து இறந்தார். ரத்தம், வேர்வை சிந்தி உழுத நிலத்திலேயே உயிரை விட்ட உழவர் பழனியின் உடலை பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். உழவர் தினத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் விவசாயிகள் தொடர் இறப்பு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகளும் வற்றின. ஜீவனாம்சமாக இருக்கும் சாத்தனூர் அணை, செங்கம் குப்பநத்தம் அணை, கலசப்பாக்கம் மிருகண்டா அணை, போளூர் செண்பக தோப்பு அணைகளும் வற்றி விட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அமைச்சர், அதிகாரிகள் தலைமையிலான குழு வறட்சி பாதிப்பு ஆய்வு செய்ததாக கூறினர். ஆனால் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், செங்கம், சேத்துப்பட்டு போன்ற இடங்களில் வறட்சி ஆய்வு பெயரளவில் மட்டுமே இருந்தது.

வறட்சி கணக்கெடுப்பு நடக்கும், கருகிய பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என நம்பிய விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சி உள்ளது. இதனால் விவசாய தொழிலை கைவிட்டு கூலி வேலைக்கு பெரும்பாலான விவசாயிகள் செல்கின்றனர். உணவளிக்கும் உழவன் ஒரு வேளை சோற்றுக்காக திண்டாடும் பரிதாப நிலை நீடிக்கிறது.

எனவே, மத்திய-மாநில அரசுகள் மீண்டும் வறட்சி கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!