வரதட்சணை கொடுமை : இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கூத்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (30). இவரது மனைவி தமிழரசி (25). இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது சீர்வரிசையாக 15 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பெண் வீட்டார் வழங்கினார்களாம். திருமணமான சில நாட்கள் மட்டுமே தம்பதியினர் சந்தோஷமாக இருந்துள்ளனர். அதன்பிறகு வரதட்சணை கொடுமை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழரசியை கணவர் தங்கராஜ், மாமியார் பெரியம்மாள், தங்கராஜின் அக்கா விமலா (35) ஆகியோர் மேலும் பணம் வாங்கி வா என கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அடிக்கடி இதுபோன்ற கொடுமை நடந்துள்ளது.

இதற்கிடையில் கடந்த 7ம்தேதி இரவு 10 மணியளவில் கணவன் வீட்டில் இருந்த தமிழரசி திடீரென பயங்கரமாக சத்தம் போட்டுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தமிழரசியின் உடலில் தீப்பற்றி எரிந்துகொண்டு இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். மாஜிஸ்திரேட்டிடம் தமிழரசி கொடுத்த வாக்குமூலத்தில், எனது கணவரின் அண்ணன் செல்வமணி (40), இவர் தெள்ளாரில் ஆசிரியராக உள்ளார். இவரது தூண்டுதலின்பேரில் எனது கணவர் தங்கராஜ், மாமியார் பெரியம்மாள், விமலா ஆகியோர் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டனர் எனக்கூறியுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த தமிழரசி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தமிழரசிக்கு திருமணமாகி 2 வருடங்களே ஆனதால் செய்யாறு சப்-கலெக்டர் பிரபுசங்கர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவாக உள்ள கணவன் தங்கராஜ் உட்பட 4பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!