வந்தவாசி அருகே கொத்தடிமைகளாக வேலை செய்தவர்கள் மீட்பு

வந்தவாசி அருகே விவசாய நிலத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 6 குழந்தைகள் உள்பட17 பேர் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.
வந்தவாசி வட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது விவசாய நிலத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இனத்தைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது. இவர்கள், கொத்தடிமைகளாக இருந்து வருவது குறித்து காஞ்சிபுரம் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 5 -ஆம் தேதி புகார் அளித்தனர்.
அதன் பேரில், வருவாய்க் கோட்டாட்சியர் அரிதாசு, வந்தவாசி வட்டாட்சியர் முரளி விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் நலச் சங்க நிர்வாகிகள், வந்தவாசி வருவாய்த் துறையினர் நல்லூர் கிராமத்துக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டு, அங்கு விவசாயக் கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் கொத்தடிமைகளாக இருப்பது உண்மை எனத் தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கு வேலை செய்த வள்ளிமுத்து (53), அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், எல்லப்பன் (25), அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர், மணி (67), அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், வரதராஜ் (27), அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம்
17 பேரை உடனடியாக மீட்டனர். இவர்களில் 6 பேர் குழந்தைகள் ஆவர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, தொழிலாளர் நல வாரியம் மூலம் தலா ரூ. ஆயிரம் வீதம் 11 பேருக்கு நிவாரண நிதி, விடுதலைச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினர்.
மேலும், அவர்களது சொந்த கிராமமான காஞ்சிபுரம் மாவட்டம், ஆர்ப்பாக்கம் கிராமத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் பெருமாள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தெள்ளாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!