வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா

வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற
உலகப் புத்தக தின விழா சிறப்பு புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில், நான் படித்த புத்தகங்களே என் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தன என்று தமிழ்நாடு மெர்க்கண்டெல் வங்கி கிளை மேலாளர் இரா.ராஜன் பாபு பேசும்போது குறிப்பிட்டார்.

இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார். நூலகர் க.மோகன் முன்னிலை வகித்தார்.

உலகப் புத்தகத் தின விழாவையொட்டி வந்தவாசி அரசுக் கிளை நூலக வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்புப் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு மெர்க்கண்டெல் வங்கி வந்தவாசி கிளை மேலாளர் இரா.ராஜன் பாபு திறந்து வைத்தார். முதல் புத்தக விற்பனையை இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

சிறப்புப் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்த தமிழ்நாடு மெர்க்கண்டெல் வங்கி வந்தவாசி கிளை மேலாளர் இரா.ராஜன் பாபு பேசும்போது, “சிறுவயதிலேயே புத்தகம் படிக்கிற ஆர்வத்தை எனது தந்தையார் மூலமாக நான் பெற்றேன். நேரங்கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். இன்றைக்கு நான் ஒரு வங்கியின் கிளை மேலாளராக உயர்ந்து நிற்பதற்கு காரணம் நான் படித்த புத்தகங்களே. புத்தகங்கள் மூலமாக நமது குழந்தைகளுக்கு சமுதாயம் குறித்த அறிவையும், உலகம் குறித்த ஞானத்தையும் வழங்க முடியும். குறைந்த செலவில் நிறைந்த பயனை அளிப்பவை என்ரும் புத்தகங்களே. நாம் அனைவரும் மகிழ்வோடு கொண்டாட வேண்டிய ஒரு தினமாக உலகப் புத்தகத் தினம் இருக்கிறது.
இந்த தினம் நம் வாழ்வின் உயர்விற்கு வழி அமைக்கும் புத்தகங்களைக் கொண்டாடும் தினம். நாமும் புத்தகங்களைப்
படிப்போம். நம் குழந்தைகளிடமும் நல்ல புத்தகங்களை வாங்கி அறிமுகம் செய்வோம்” என்று குறிப்பிட்டார்.

விழாவில், ரூ.1000/- செலுத்தி, நூலகத்தின் 184 மற்றும் 185-ஆவது நூலகப் புரவலராக இணைந்த கிளை மேலாளர் இரா.ராஜன் பாபு, தீபம் மொபைல்ஸ் எம்.ரமேஷ் ஆகியோருக்கு பாராட்டுச் செய்யப்பட்டது.

உலகப் புத்தகத் தின சிறப்புப் புத்தகக் கண்காட்சியில் கலை, இலக்கியம், சமுதாயம், அறிவியல், வரலாறு குறித்த 200-க்கும் மேற்பட்ட தலைப்பிலான நூல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சி தினமும் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நூலகத்தில் வரும் ஏப்ரல்.28-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் வாங்கப்படும் நூல்களுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது

நிகழ்வை நூலக உதவியாளர் பு.நாராயணன் ஒருங்கிணைத்தார். நிறைவாக, நூலகர் கஜா.தமீம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!