வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழ் கலை இலக்கியத் திருவிழா

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழ் கலை இலக்கியத் திருவிழாவில், குழந்தைகளின் ஈர அன்பினால் தான் இந்த பூமி இன்னமும் செழித்தோங்கி வளர்ந்து வருகிறது என்று திரைப்பட இயக்குநர் பிருந்தா சாரதி குறிப்பிட்டார்.

இவ்விழாவிற்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். துணைத் தலைவர்கள் சு.அசோக்குமார், பீ.ரகமத்துல்லா, செயற்குழு உறுப்பினர், வந்தை பிரேம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.

மழலைக் கலைஞர்களின் நாட்டிய நிகழ்வுகளோடு தொடங்கிய இவ்விழாவில், பெ.பார்த்திபன், இரா.அருண்குமார், ரஜினி ஆகியோர் கிராமியப் பாடல்களைப் பாடினர். அன்னை தெரசா பள்ளி குழந்தைகளின் தேசப் பக்தி பாடலும், வந்தை எஸ்ஆர்எம் இன்போடென்க் மாணவிகளின் சிந்தனை நாடகங்களும் நடைபெற்றன.

வந்தை கவிஞர்களின் கவிதை உலாவை கவிஞர் வசீகரன் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து, மு.முகமது அப்துல்லா, வந்தை குமரன், எ.ராஜ்குமார், இரா.பாஸ்கரன், ஆகியோர் கவிதைகளை வாசித்தனர்.

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வந்தை வட்ட அளவில் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பிடித்த மேல்பாதி அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவி ஏ.செல்வமணி, 12-ஆம் வகுப்பில் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற குண்ணகம்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவி இரா.துளசி, பயிற்றுவித்த தமிழாசிரியர்கள் பி.முருகேசன், மு.பூங்காவனம் ஆகியோருக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி, சென்னை கவிஞர் கார்முகிலோன் வாழ்த்துரை
வழங்கினார்.

கவிஞர் மு.,முருகேஷ் எழுதிய ‘குழந்தைகளால் அழகாகும் பூமி’ நூலினை ’தித்திக்குதே…’ திரைப்பட இயக்குநரும், அஞ்சான், சண்டக்கோழி படங்களின் வசனகர்த்தாவும் கவிஞருமான பிருந்தா சாரதி வெளியிட, நூலின் முதல் படியை இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்பரையாற்றிய திரைப்பட இயக்குநர் பிருந்தா சாரதி பேசும்போது, “சித்திரை முதல் நாளில் வந்தவாசி நகரில் நடைபெறும் இந்த கலை இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. பல்வேறு திறமை படைத்த குழந்தைகளும் இளைஞர்களும் இந்த விழாவில் அதிகமாக பங்கேற்றிருப்பது பாராட்டுக்குரியது.

இந்த விழாவில் வெளியிட்டிருக்கிற கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘குழந்தைகளால் அழகாகும் பூமி’நூல், பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி அணுக வேண்டுமென்பதையும், குழந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்தால், அவர்கள் முயன்று வெற்றிகளைப் பெறுவார்கள்
என்கிற நம்பிக்கையையும் விதைப்பதாக உள்ளது.

இன்றைக்கு நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகளையும், தமிழர்கள் உரிமைகளையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவரும் சூழலில், நம் கலை இலக்கியங்களின் வழியாகத்தான் நம்மை மீட்டெடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்த் திரையுலகம் இன்னும் சமூக அக்கறையுடன் கூடிய நல்ல வசனங்களாலும், கவித்துவம் மிளிரும் பாடல்களாலும் தமிழை வளர்த்து வருகிறது. நம் தேசத்தில் எத்தப்னை விதமான ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், அவற்றை களைந்தெறியும் பணியை நல்ல கலை – இலக்கியப் படைப்புகளே காலந்தோறும் செய்து வருகின்றன.

குழந்தைகளைப் போல் வாழவே நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகின்றோம். என்றைக்கு நாம் குழந்தைகளை நெருக்கமாகப் புரிந்துகொள்ள முயல்கிறோமோ, அன்றைக்கு நமக்கும் குழந்தை மனம் வாய்க்கும். ஏற்றத்தாழ்வு பாராத, யாரையும் பகையாக எண்ணாத, எல்லோரிடமும் அன்புகாட்டும் குழந்தைகளின் ஈர அன்பினால்தான், இந்த பூமி என்றைக்கும் செழித்தோங்கி வளரும்” என்று குறிப்பிட்டார்.

விழாவிற்கான ஒருங்கிணைப்பை எ.மோகன்தாஸ், வெ.அரிகிருஷ்ணன், க.முருகன், ம.சுரேஷ்பாபு, எம்.எஸ்.கார்த்திகேயன், தே.அனிதா தேவா, இரா.நளினா உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகழ்வை கு.சதானந்தன், சீ.கேசவராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவாக, பொருளாளர் ஏ.தேவா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!