வந்தவாசி ஆதிதிராவிடர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறை அதிரடி சோதனை: ரூ. 69 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையின் போது, ரூ.69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தவாசி பொட்டிநாயுடு தெருவில், ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ், ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவிகள் விடுதிகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
இந்த அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், வங்கியிலிருந்து பெருமளவு பணம் பெறப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டிஎஸ்பி சரவணகுமார் தலைமையிலான திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த அலுவலகத்துக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் பணம் பதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று சோதனை செய்தபோது, 4 மூட்டைகளில் ரூ.69 லட்சம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அற்புதம் மற்றும் அலுவலக ஊழியர்கள், விடுதிக் காப்பாளர்கள் உள்ளிட்டோரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அலுவலக ஆவணங்களில் முறைகேடு செய்துள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பண மூட்டைகளை போலீஸார் தங்களது வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றனர். இந்தச் சோதனை சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறியதாவது: வந்தவாசி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ள வீட்டிலிருந்து ரூ.69 லட்சத்து 617-ம், தனி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ரூ.23 ஆயிரமும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பணம் வந்தவாசி வட்டாட்சியர் முரளிதரனிடம் ஒப்படைக்கப்படும்.
இதுகுறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!