பசுமையை வலியுறுத்தி வந்தவாசியில் மாரத்தான் ஓட்டம்

இயற்கை பாதுகாப்பு, பசுமைப் புரட்சியை வலியுறுத்தி, வந்தவாசியில் மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி கோ கிரீன் கிளப் சார்பில் நடைபெற்ற இந்த மினி மாரத்தானில் இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள் என 3 பிரிவாக பிரிந்து ஓடினர். இதில், மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை முன்னாள் மக்களவை உறுப்பினர் மு.துரை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், இளைஞர்கள் சுமார் 7 கி.மீ. தொலைவும், இளம் பெண்கள் சுமார் 3 கி.மீ. தொலைவும், சிறுவர்கள் சுமார் 1.5 கி.மீ. தொலைவும் ஓடினர்.

போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு கோ கிரீன் கிளப் சார்பில், பனியன், தொப்பி ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், பந்தயத்தில் பங்கேற்றவர்களுக்கு வழியில் ஆங்காங்கே குடிநீரும் வழங்கப்பட்டன. மருத்துவக் குழு, அவசர ஊர்தி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
3 பிரிவு மினி மாரத்தான் போட்டிகளிலும் தலா முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி துணைத் தலைவர் அ.கணேஷ்குமார், மாம்பட்டு முத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமண சுவாமிகள், தொழிலதிபர் அ.ஜ.இஷாக் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!