திருவண்ணாமலை மற்றும் தேனியில் 7 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துடன் இணைந்த ஆயுஷ் மருத்துவமனை

தேனி, திருவண்ணாமலையில் 7 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் சித்தா, யோகா, இயற்கை மருத்துவத்துடன் இணைந்த ‘ஆயுஷ் மருத்துவமனை’’ ஏற்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
1250 சித்த மருத்துவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் செலவில் தொக்கணம், வர்மம் பற்றி சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சித்த மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், காலியாக உள்ள சித்த மருத்துவர்கள் இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் பல்கலைக்கழக கூட்டரங்கில் முதல் சித்த மருத்துவ திருநாளை முன்னிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மாநாட்டின் ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு மலர், அகத்தியர் தனிக்கட்டுரை மற்றும் பேரையர் குடிநீர் 100 புத்தகத்தினையும் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:–
‘‘வருமுன் காப்பதே சிறந்தது” என்ற அடித்தளத்தின் மீது இந்திய மருத்துவ முறைகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருத்துவ முறைகளான, சித்தா, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளுடன் பிரபலமாக உள்ள யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிய ‘ஆயுஷ்’ என்பதற்கு இணையானதாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மருத்துவ முறைகள் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளதுடன் பல்வேறு நோய்களை கையாள்வதில் திறம்பட செயல்பட்டதில் மக்கள் மற்றும் தமிழக அரசின் ஆதரவினை பெற்றுள்ளன.
மருத்துவ சிகிச்சை வழங்கும் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் கீழ் செயல்படும் 1,491 மருத்துவ நிலையங்களில் 1,058 சித்தா மருத்துவ நிலையங்கள் செயல்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் ஐந்து இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதிக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது என்ற தனிப்பட்ட பெருமையை தமிழ்நாடு கொண்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 160 சித்த மருத்துவ பட்டப் படிப்பு மற்றும் 94 பட்ட மேற்படிப்புகளில் இடங்களும் உள்ளது.
இந்திய மருத்துவ முறை சிகிச்சை யினை அரசு மருத்துவமனைகளுடன் இணைக்கவேண்டும் என்ற கொள்கையின் கீழ், தற்போது நவீன மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த மருந்தாளுர் பட்டயப்படிப்பு, செவிலியர் சிகிச்சை படிப்பு ஆகிய இரண்டு பட்டயப் படிப்புகள் சென்னை, அரசு அறிஞர் அண்ணா இந்திய முறை மருத்துவமனை மற்றும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகியவற்றில் நடத்தப்பட்டு வருகின்றன.
மூலிகை செடிகள்
மூலிகை செடிகள் மற்றும் இயற்கை மருந்துகளைக் கொண்டு இந்திய மருத்துவ முறையின் கீழ் தயாரிக்கப்படும் பல்வேறு மருந்துகளின் தரத்தினை உறுதி செய்வதற்கு ஏற்ற வகையில் மாநில மருந்து ஆய்வுக் கூடம் (இந்திய மருத்துவம்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருந்து ஆய்வாளர்களால் (இந்திய மருத்துவம்) எடுக்கப்படும் சட்டபூர்வ மருந்து மாதிரிகளின் தரத்தை சோதனை செய்வது இந்த ஆய்வுக் கூடத்தின் தலையாய பணியாகும்.
தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியான தேசிய சித்த மருத்துவ நிறுவனம், 2005-ம் ஆண்டு முதல் சென்னை தாம்பரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையம், ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு, சித்த மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு கல்வியை வழங்கி வருகிறது. மாநில இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்பை பேணி வருகிறது. இந்நிறுவனம் உள்நோயாளிகள் சேவையை வழங்குவதற்காக 200 படுக்கைகள் கொண்டுள்ளது. மேலும் நாள் ஒன்றிற்கு சராசரியாக 1500 வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குகிறது.
புயல் நிவாரணப் பணிகள்
வர்தா புயலின் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 18.12.2016 முதல் 22.12.2016 வரை புயல் நிவாரண முகாம்கள் நடத்தப்பட்டு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இம்முகாம்களினால் 3,87,965 பொதுமக்கள் பயனடைந்தனர். தாளிசாதி சூரணம், தயிர்சுண்டி சூரணம், வலி நிவாரணி, வெங்கவெண்ணை போன்ற சித்த மருந்துகள் தொற்று மற்றும் வைரஸ் காய்ச்சலை தடுப்பதற்காக வழங்கப்பட்டன.
119 வகை மருந்துகள்
தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்) இந்திய மருத்துவ முறை மருந்துகளான சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருந்துகளை தயார் செய்யும் நோக்கத்திற்காக 1983-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இக்கழகம் தயாரிக்கும் மருந்துகள் இம்மாநிலத்தில் இயங்கும் அனைத்து இந்திய முறை மருத்துவ நிலையங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும், முகவர் முகமையாக இந்திய முறை மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளையும், உபகரணங்களையும் கொள்முதல் செய்து வினியோகம் செய்து வருகிறது. இக்கழகத்திற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் இரண்டு விற்பனை கூடங்கள் உள்ளன.இக்கழகம் அதன் தொழிற்சாலையில் 119 வகையான மருந்துகளை தயாரித்து வருகிறது. இதில் 76 சித்த மருந்துகள், 38 ஆயுர்வேத மருந்துகள் மற்றும் 5 யுனானி மருந்துகள் ஆகும்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு
டெங்கு, பன்றிக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்றவைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மலைவேம்பு, நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் கபசுரக் குடிநீர் ஆகிய மருந்துகளின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இத்துறை எடுத்த தொடர் முயற்சியால், இத்தகைய மருந்துகள் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், தொற்று நோய்கள் பரவுதலை தடுப்பதிலும் பொது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கபசுரக் குடிநீர்
கபசுரக் குடிநீர் என்பது 15 கலவைக் கூறுகளைக் கொண்ட, உயர்ந்த ரக சித்த மருத்துவ பாரம்பரிய மருந்தாகும். இதற்கு, வைரஸ் காய்ச்சலை எதிர்க்கும் தன்மையும், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்களைப் போக்கும் ஆற்றலும் உள்ளது. இது அதிக அளவு காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கபசுர குடிநீரின் ஆன்டி ஆக்சிடன்ட் (anti-oxidant) செய்கை நோய் எதிர்ப்பு சக்தியினை (immuno-modulatory) அதிகப்படுத்துகிறது. கபசுரக் குடிநீரில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக சித்த மருத்துவத்தில், நுரையீரலை பாதித்து வரும் கபம் மற்றும் கபசுரத்தை குணப்படுத்த வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே கபசுரக் குடிநீரில் சேரும் மூலிகைகள் கபசுரத்தை ஒழிப்பதோடு அன்றி காய்ச்சலின் காரணமாக வரும் பக்க விளைவுகளையும் குணப்படுத்தி, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். நிலவேம்பு குடிநீர் தமிழகத்தை தாக்கிய டெங்கு காய்ச்சலை எவ்வாறு கட்டுப்படுத்தியதோ அவ்வாறே கபசுர குடிநீரும் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது.
அம்மா மகப்பேறு
சஞ்சீவி பெட்டகம்
பூரண மகப்பேறு என்பது குழந்தை பிறந்தவுடன் முடிவடைந்துவிடாமல், தாய்சேய் நலன் காப்பதும் அடங்கும். மகப்பேறு காலத்தில் மகளிரின் ஆரோக்கியத்தை காக்க 11 வகையான சித்த மருத்துவ மூலிகைகள் ‘‘அம்மா மகப்பேறு சிகிச்சை பெட்டகம்” என்ற பெயரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இம்மாநிலத்திற்கான மத்திய ஆயுஷ் குழுமத்தின் திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக ‘‘மாநில ஆயுஷ் சங்கம்-தமிழ்நாடு” என்ற சங்கத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ‘ஆயுஷ்’-இன் வளர்ச்சி பணிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 60:40 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீட்டினைப் பகிர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2–ந் தேதியன்று 105 இந்திய முறை மற்றும் ஓமியோபதி துறை மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சரால் வழங்கப்பட்டது. விரைவில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம 148 சித்த மருத்துவர்கள் மற்றும் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் நலவாழ்வு மையங்களில் 14 உதவி மருத்துவ அலுவலர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்.
புதிய மருத்துவமனை
தேனி மற்றும் திருவண்ணாமலையில் 7 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துடன் இணைந்த ஆயுஷ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.
சித்த மருத்துவர்கள் தொக்கணம், வர்மம் போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கும் பொருட்டு, 1,250 சித்த மருத்துவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் செலவில் சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.
சென்னை கன்டோன்மன்ட் மருத்துவமனையின் சித்தா மற்றும் ஆயுர்வேதா பிரிவுகள், 46 லட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும்
டெங்கு மற்றும் சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் (ஆயுஷ்) ஸ்ரீபத் யசோ நாயக், மத்திய இணை செயலாளர் (ஆயுஷ்) பிரமோத் குமார் பதாக், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரோ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, மத்திய சித்த ஆராய்ச்சி நிறுவன பொது இயக்குநர் ராமசாமி, தேசிய சித்த நிறுவன இயக்குனர் பானுமதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இணை இயக்குநர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!