திருவண்ணாமலை கோயிலுக்கு பெட்ரோல் குண்டு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என்று எழுதப்பட்ட மிரட்டல் கடிதம் வந்ததால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தக் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற்றது.
அன்று முதல் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், கோயில் இணை ஆணையருக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில், “”அருணாசலேஸ்வரர் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசுவோம். திருமாவளவன் வாழ்க. விடுதலைச் சிறுத்தைகள், காஞ்சிபுரம்” என்று எழுதப்பட்டிருந்ததாம்.
டிசம்பர் 31-ஆம் தேதி வரப்பெற்ற இந்த மிரட்டல் கடிதம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் திங்கள்கிழமை புகார் அளித்தார்.
போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, கோயிலில் வழக்கத்தைவிட அதிகளவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் அனைவரும் தீவிரமாக பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!