வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் முப்பெரும் விழா

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம் மற்றும் எஸ்.ஆர்.எம்.இன்போடெக் கம்ப்யூட்டர் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய கல்வி நூல் வெளியீட்டு விழா, நூலகத்திற்கான அதிக உறுப்பினர்களைச் சேர்த்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,நூலகத்திற்கான தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவில், வகுப்பறைச் சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஆசிரியர்கள் உண்டாக்கும் நல்ல மாற்றங்களே நாளைய சமூகத்தையும் மாற்றும் சக்தி படைத்தது என்று நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார். வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன், எஸ்.ஆர்.எம். இன்போடெக் முதல்வர் எ.தேவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், ஆசிரியர் சசிகலா உதயகுமார் எழுதிய ‘இது எங்கள் வகுப்பறை’ கல்வி நூலினை பாரத ஸ்டேட் வங்கி வந்தவாசி கிளை முதன்மை மேலாளர் பி.மகேந்திரவர்மன் வெளியிட, இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.

விழாவிற்கு தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, ”ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவென்பது நட்புரீதியாக இருக்கும்போது, அங்கு கற்றல் என்பதே மிகவும் இனிப்பான ஒன்றாக மாறிவிடும். இன்றைய தலைமுறை மாணவர்கள் மிகவும் விழிப்புணர்வோடும் அறிவியல் சாதனங்களைச் சிறப்பாக கையாள்பவர்களாவும் இருக்கிறார்கள். அவர்களிடம் ஆசிரியர்கள் அன்பாக பழகும்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான இடைவெளி என்பதே இல்லாமல் போகிறது.ஒரு ஆசிரியரின் வகுப்பறை அனுபவங்கள் அவ்வப்போது முகநூலில் இடம்பெற்று, அது இன்று ஒரு நூலாகவும் வெளிவருவது, அறிவியல் தொழில்நுட்பத்தை ஆக்கச் செயல்பாடுகளுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணமாகும். ஒவ்வொரு நாளும் வகுப்பறைக்குள் நுழையும் ஆசிரியர், தன்னை மாணவர்கள் விரும்பும் ஒரு
ஆசிரியராக ஆக்கிக் கொள்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை நூலாசிரியர் சசிகலா, வெகுஎளிமையாக பதிவு செய்துள்ளார். சமூக மாற்றத்திற்கு வித்திடுபவர்களாக ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நூலும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல பல விளைவுகளை உண்டாக்குமென்று உறுதியாக நம்புகின்றேன். வகுப்பறைச் சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஆசிரியர்கள் உண்டாக்கும் நல்ல மாற்றங்களே, நாளைய சமூகத்தையும் மாற்றும் சக்தி படைத்தது என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்படும்போது, இந்த சமுதாயம் இன்னும் மேம்பட்ட சமுதாயமாக மாறுவது நிச்சயம்.” இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், ரூ.10,500/- மதிப்புள்ள இரும்பு பீரோ ஒன்று வந்தவாசி ஸ்டேட் வங்கியின் சார்பாக நூலகத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது. ரூ.1,000/- செலுத்தி நூலகப் புரவலராக இணைந்தஆசிரியர் சி.துரை, மற்றும் வந்தவாசி வட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்தசுமார் 2598 மாணவர்களை நூலக உறுப்பினர்களாகச் சேர்த்த பள்ளிகளுக்கும் பாராட்டுச்செய்யப்பட்டது.

விழாவில், அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பெ.வேதபிரகாஷ், ஆசிரியர்கள், மீனாட்சி, ஜெ.திவாகர் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகள்கலந்துகொண்டனர்.நிறைவாக, ஊர்ப்புற நூலகர் ஜா.தமீம் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!