கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு ’தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது’

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும்
இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கு சென்னை முகப்பேரிலுள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், வந்தவாசியை அடுத்தஅம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ எனும் நூல், 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் இலக்கிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, ’தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது’ வழங்கப்பட்டது.

இவ்விருது வழங்கும் விழாவிற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலத் தலைவர் சி.சொக்கலிங்கம் தலைமையேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் மோ.ஜேம்ஸ் அனைவரையும் வரவேற்றார். இலக்கியக் குழு செயலாளர் முனைவர் நா.இராமச்சந்திரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

விழாவில், தகஇபெம பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு, என்.சி.பி.ஹெச். மேலாண்மை இயக்குநர் சண்முக சரவணன், பொதுமேலாளர் தி.ரெத்தின சபாபதி, பொருளாளர் ப.பா.ரமணி, ‘கலை’ மணிமுடி, ‘மேன்மை’ மணி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நூல் விருதுப் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர் மு.முருகேஷூக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு ‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருதி’னை வழங்க, ஓவியர் டிராட்ஸ்கி மருது ரூபாய்.5,000/- பரிசுத் தொகையினை வழங்கினர்.

’தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது’ பெற்ற கவிஞர் மு.முருகேஷ், வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதுவரை 37-க்கும் மேற்பட்ட கதை, கவிதை ,கட்டுரை, சிறுவர் இலக்கியம், விமர்சன நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.இலக்கிய மாநாடுகளில் உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளிலுள்ள அமைப்புகளின் அழைப்பின் பேரில் சென்று, உரையாற்றி வந்துள்ளார்.

இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும்,சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளன.

சிறுவர்களுக்கான 9 கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் எழுதியுள்ள இவர், சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு பாட நூல்கள் உருவாக்கத்தில்பங்களிப்பு செய்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள் சிறுகதைகள்’ எனும் நூல், தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டத்தில் தேர்வாகி, தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!