தமிழக அரசு வழங்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டது

வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலாவுக்கு, தமிழக அரசு வழங்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது.
     தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பாக கல்விப்பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி, கெளரவித்து வருகிறது. இந்தாண்டு செய்யாறு கல்வி மாவட்டத்தில் சிறப்பாக கல்விப்பணி செய்த ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருது, வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிவரும் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
      சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவிற்கு தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தலைமையேற்றார். பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்,இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றியதோடு, ஆசிரியர்களுக்கு விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தார். 67 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நல்லாசிரியர் விருதினை வழங்கினார். விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். கல்வி முதன்மைச்  செயலர் பிரதீப் யாதவ், கல்விச் செயலாளர் உதயசந்திரன் மற்றும் தமிழக அமைச்சர்கள் , நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.
      நல்லாசிரியர் விருது பெற்றிருக்கும் கவிஞர் அ.வெண்ணிலா, வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 26 ஆண்டுகளாக ஆசிரியப் பணியை செய்துவரும் இவர், வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளியில் 2001-இல்  பணியில் சேர்ந்தார். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமின்றி, பள்ளியின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டவர். நபார்டு வங்கியின் மூலமாக பள்ளிக்கு 16 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்படுவதற்கும்,மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் செலவில் 15 கழிப்பறைகள் கட்டப்படுவதற்கும் தலைமையாசிரியரோடு இணைந்து நின்று முன்முயற்சி எடுத்துள்ளார்.
      ஒரு படைப்பாளியாகவும் தமிழகம் தாண்டி அறிமுகமாகியுள்ள அ.வெண்ணிலா, இதுவரை கவிதை நூல்கள் – 6, சிறுகதை நூல்கள் -2,  கட்டுரை நூல்கள் – 3, தொகுப்பு நூல்கள் – 4, கடித நூல் – 1 என 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
      தனது நூல்களுக்காக கவிதை உறவு, சிற்பி அறக்கட்டளை,தேவமகள் அறக்கட்டளை, ஏலாதி அறக்கட்டளை, திருப்பூர் அரிமா சங்கம், தமுஎகச செல்வன் கார்க்கி , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ஆகிய அமைப்புகள் வழங்கிய பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
        2007-ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கிய சிறந்த கவிதை நூலுக்கான விருதையும் பெற்றுள்ளார். 2002-ஆம் ஆண்டில் சர்வதேச பெண் எழுத்தாளர்கள் (ஹைதராபாத்) கலந்துகொண்ட சார்க்   மாநாட்டிலும்,  2011- சனவரியில் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான மாநாட்டிலும் தமிழகப் பிரதிநிதியாகப் பங்கேற்றுள்ளார். 2010-ஆம் ஆண்டில் மத்திய அரசின் சாகித்திய அகாதெமி அழைப்பின் பேரில் மேற்கு வங்காளம் சென்று, அங்குள்ள எழுத்தாளர்களோடும் மக்களோடும் கலந்துரையாடியுள்ளார்.
       இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம்,இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. இவரது படைப்புகளை இதுவரை 10 பேர் இளமுனைவர் (எம்ஃபில்.,) ஆய்வும், 4 பேர் முனைவர் (பி.ஹெச்டி.,) பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன.
        2009-10 வரை சமச்சீர்க் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து, புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

One thought on “தமிழக அரசு வழங்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!