ஏரியில் வண்டல் மண் எடுக்க லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

விவசாயிகள் தங்கள் நிலங்களில் வண்டல்மண் மூலம் மேம்படுத்த ஏரிகளிலிருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தேசூரை அடுத்த சியமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவக்குமார் (வயது 40) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்து இருந்தார். அவருக்கு சியமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் இலவசமாக மண் எடுக்க அனுமதி கிடைத்தது.

சியமங்கலம் பகுதியில் சியமங்கலம் ஏரி, மஞ்சப்பட்டு ஏரி என 2 ஏரிகள் உள்ளன. சிவக்குமார் வண்டல் மண் எடுப்பதற்காக மஞ்சப்பட்டு ஏரிக்கு சென்று உள்ளார். அப்போது அவரை சியமங்கலம் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் (35) தடுத்து நிறுத்தி, ‘‘உங்களுக்கு மஞ்சப்பட்டு ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கவில்லை’’ என்று கூறியுள்ளார். அதற்கு சிவக்குமார், ‘‘சியமங்கலம் பகுதி ஏரியில் வண்டல் மண் எடுத்து கொள்ளலாம் என்று உத்தரவு உள்ளது’’ என்றார்.

மண் எடுக்க விடாமல் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் தடுத்து நிறுத்தியதால், அவருக்கு சிவக்குமார் ரூ.500 வழங்கி உள்ளார். அதனை பெற்று கொண்டு அவர் மண் எடுக்க அனுமதித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமாரிடம், மஞ்சப்பட்டு ஏரியில் மீண்டும் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் கோபிநாத் கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர், அது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத், திருநாவுகரசு மற்றும் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவக்குமாரிடம் வழங்கி அதனை வருவாய் ஆய்வாளர் கோபிநாத்திடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி சிவக்குமார், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ரூபாய் நோட்டுகளை கோபிநாத்திடம் அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

கோபிநாத் லஞ்ச பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி- தினத்தந்தி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!