வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருது

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷூக்கு சென்னையில் செயல்படும் கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருது கடந்த வெள்ளிக்கிழமை சென்னை மயிலாப்பூரிலுள்ள கவிக்கோ அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு தமிழின் மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் இராம.குருநாதன் அனைவரையும் வரவேற்றார்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழில் வெளியான நாவல், கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை நூல்களில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு பாராட்டுச் சான்றிதழும் தலா ரூ.5000/- பணமுடிப்பும் வழங்கப்பட்டன.

வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஹைக்கூ கவிதை நூல் சென்ற ஆண்டில் வெளியான சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு, அந்நூலை எழுதிய கவிஞர் மு.முருகேஷூக்கு ’கவிஞர் விழிகள் தி.நடராசன்’ பெயரிலான இலக்கிய விருதினையும் பாராட்டுச் சான்றிதழையும் ரூ.5000/- பண முடிப்பையும் தமிழக அரசின் வேளாண் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., வழங்கிச் சிறப்பித்தார்.

கவிஞர் மு.முருகேஷ் இதுவரை 35-க்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கிய, விமர்சன நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இள முனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது தொடர் ஹைக்கூ செயல்பாடுகளுக்காக குவைத் நாட்டில் இயங்கும் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் ‘குறுங்கவிச் செல்வர்’ எனும் விருதினை சென்ற ஆண்டு வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பாராட்டுதழ்களையும் தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், பொதுவுடைமை இயக்க மூத்தத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம.திருமலை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் கவிமுகில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!