திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் நாளை வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2012, 2013, 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள் வெள்ளிக்கிழமை வெளியாகும் தகுதிப்பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 286 பட்டதாரி ஆசிரியர்கள், 623 பின்னடைவுப் பணியிடங்கள், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின்கீழ் 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 2012, 2013, 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது.
எனவே, ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலைப் பட்டம் பயின்றவர்கள். ஏற்கெனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள். பி.எட். பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட். தேர்ச்சி பெற்றவர்கள். சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித் தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் இருந்து தற்போது தகுதி பெற்றவர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
எனவே, 2012, 2013, 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் வரும் 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. எனவே, தேர்வு எழுதியவர்கள் இணையதளம் மூலம் தங்களது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரங்களை இணையதளத்தில் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரங்களைப் பதிந்து விவரங்களை அறியலாம். தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் இணையதளத்திலேயே திருத்தம் செய்யலாம். தங்களின் அசல் ஆவணங்களைக் கொண்டு விவரங்களை மீண்டும் சரிபார்த்து, புகைப்படம், கையொப்பமிட்டு உறுதிச் சான்று அளிக்க வேண்டும்.
இந்த விவரங்களை வரும் 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் 20-ஆம் தேதி இரவு 10 மணி வரை இணையதளத்தில் சரிபார்த்து, திருத்தம் தேவையெனில் இணையதளத்திலேயே மேற்கொள்ளலாம். திருத்தங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
இதுபோன்ற வாய்ப்புகள் மீண்டும் வழங்கப்படமாட்டாது. கால நீட்டிப்பும் செய்யப்படமாட்டாது. தற்போது சரிபார்க்கப்படும் விவரங்களைக் கொண்டுதான் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
இந்த இறுதி தகுதிப் பட்டியலைக் கொண்டுதான் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!