குழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது

குழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதாக செய்யாறு அடுத்த புரிசை கிராமத்தைச்சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து வயதான பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரோடு வந்திருந்த 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக இளைஞர் ஒருவர் பேசிய வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் பேசிய இளைஞர் தனது பெயர் வீரராகவன் என்றும், செய்யாறு அருகே உள்ள புரிசை கிராமத்தில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், செய்யாறு பக்கத்தில் அதிகமாக குழந்தைகளை கடத்துவதாகவும், இன்று இரவு பாராசூர் என்ற கிராமத்தில் 2 குழந்தைகளை தூக்கிசென்றுள்ளதாகவும் அந்த வீடியோவில் வீரராகவன் குறிப்பிட்டார்.

ஏழியனூரில் வடமாநில கும்பல் 2 குழந்தைகளை கடத்திருப்பதாகவும், தாங்கல், உத்திரமேரூரிலும் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் தங்கள் குழந்தைளை பார்த்து கொள்ளுமாறு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

செய்யாறு பக்கத்தில் விநாயகபுரம் என்ற ஊரில் இந்திகாரர்கள் ஐஸ்பெட்டிக்குள் வைத்து குழந்தைகளை தூக்கி சென்றதாகவும், பொதுமக்கள் துரத்தியதால் விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும், அந்த வீடியோவில் வீரராகவன் தெரிவிக்கிறார். இதுவரை செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அனைவரும் உஷாராக இருக்குமாறும் அந்த வீடியோவில் தெரிவிக்கிறார்.
இறுதியாக முடிந்த வரை இதனை ஷேர் செய்து எவ்வளவு குழந்தைகளை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுங்கள் நன்றி என கூறுகிறார்.

வீரராகவனின் இந்த வீடியோ செய்யாறு பகுதியில் வேகமாக பரவியதையடுத்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து அனக்காவூர் போலீசார் இன்று அதிகாலை 4 மணிக்கு உதவி ஆய்வாளர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் புரிசை கிராமத்திற்கு சென்று வீரராகவனை பிடித்து கைது செய்தனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!