திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாநிலத் தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ் கான் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ் கான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
கூட்டத்தில், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள், மாவட்ட ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளனவா என்று மாநிலத் தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான படிவங்கள், எழுது பொருள்கள், வாக்குப் பெட்டிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளனவா என்று கேட்டறிந்ததுடன், வாக்குப் பெட்டிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேண்டிய பொருள்களை சரிவர பராமரிக்க உதவி இயக்குநர் அளவிலான அலுவலர்களை நியமித்து ஊராட்சி ஒன்றியங்களில் பராமரிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் கூறினார்.மேலும், நகரப் பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ் கான் அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் செ.ஜெயக்குமார், திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளிப் பிரியா மற்றும் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!