திருவண்ணாமலை மாவட்டத்தில் 19ம் தேதி மாணவர்கள் செய்தித்தாள் வாசித்து உலக சாதனை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் வரும் 19ம் தேதி மாணவர்கள் செய்தித்தாள் வாசித்து உலக சாதனை முயற்சி நடத்த உள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் கல்வி தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கி உள்ளதால் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கலெக்டர் கந்தசாமியும், முதன்ைம கல்வி அலுவலர் ஜெயக்குமாரும் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

மேலும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்குடன் ஆலோசனை நடத்தி கல்வி தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகளில் ஆய்வு நடத்திய கலெக்டர் மாணவர்களிடையே தமிழ் வாசிக்கும் திறன் குறைவாக இருப்பதை கண்டு அதிர்ச்சயடைந்தார்.இதை மேம்படுத்த திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் தமிழ் வாசிப்பு திறனை மேம்படுத்த முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ் செய்தித்தாள் மற்றும் பாடங்களை வாசிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை ஒருநாளில் அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே குறிப்பிட்ட நேரத்தில் தமிழ் செய்தித்தாள்களை வாசிக்க செய்து அதை உலகசாதனையாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி வரும் 19ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களை காலை 10 மணி முதல் 10.15 வரை 15 நிமிடம் தமிழ் செய்தித்தாள்களை வாசிக்க செய்து வாசிக்கும் திறனை மேம்படுத்தி அதே சமயம் அதை உலக சாதனையாக மாற்ற ஒரு மனதாக முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அது தொடர்பாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு தமிழ் வாசிப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அடுமட்டுமின்றி இதை கண்காணிக்க தனியாக ஆரியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்டம் முழுவதும் சென்று பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வாசிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதவிர அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தமிழ் வாசிப்பு தறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பாடங்கள் மற்றும் செய்தித்தாள்களை வாசித்து பழகி வருகின்றனர்.

அதன்படி 19ம் தேதி மாணவ, மாணவிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் செய்தித்தாளை படித்துவிட்டு அடுத்த 5 நிமிடங்களில் செய்தி குறிப்பேட்டில் ஒரு உலக செய்தி, ஒரு இந்திய செய்தி, ஒரு தமிழ்நாடு செய்தி, ஒரு திருவண்ணாமலை மாவட்ட செய்தி, ஒரு விளையாட்டு செய்தி என 5 செய்திகளை எடுத்து எழுத வேண்டும். இதனை வீடியோவாக எடுக்க ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு செய்தித்தாள் உரிய நேரத்தில் கிடைத்திட முன்கூட்டியே அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். காலையில் அறிவிக்கப்பட்டள்ள நேரத்திற்குள் அனைத்து மாணவர்களும் சீருடையில் பள்ளிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் முதல் மாணவர்கள் தயார் நிைலயில் இருக்க, செய்தி தாள் வாசிக்க, வாசித்ததை எழுத உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் உணர்ந்து கொள்ளும் வகையில் மணி ஒலிக்க வேண்டும்.

நேரத்தை கடைபிடிக்கும் வகையில் அனைத்து மாணவர்களும் பார்க்கும் வகையில் சுவர் கடிகாரம் அமைக்க வேண்டும். பள்ளிகளில் எடுக்கப்பட்ட வீடியோவை டிவிடி குறுந்தகட்டில் பதிவு செய்து அதன் மேல் பள்ளியின் பெயர், ஒன்றியம் ஆகியவற்றை எழுதி, 19ம் தேதி மலை 5 மணிக்குள் திருவண்ணாமலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும் என பல அறிவுரைகளை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளார்.

வேட்டவலம்: மாவட்ட நிர்வாக உத்தவின்படி தமிழ்வாசிப்பு பயிற்சியில் வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேட்டவலம்தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட்டாக இணைந்து நேற்று செய்தித்தாழ் வாசிப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

உலக அளவில் 2வது முறையாக சாதனை முயற்சி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் ஏற்கனவே 22 வருடங்களுக்கு முன்பு அவர்களது தாய் தொழியை வாசிக்க வைப்பதற்காக பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடி வாசித்தது உலகசாதனையாக கருதப்படுவதாக தெரிகிறது. இதை அடுத்து உலக அளவில் 2வது முறையாக வாசிக்கும் திறனை மேம்படுத்த இந்தியாவில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழி வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளி கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!