சனவரி 26-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலான தீர்மானங்களை இயற்ற வேண்டும்-தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு

தமிழகம் முழுவதும் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலான தீர்மானங்களை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு அந்தக் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் க.சண்முக வேலாயுதம் அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு சார்பில் கிராம சபைக் கூட்டங்களில் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்வதற்காக தமிழகம் தழுவிய பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வடக்கு மண்டல திட்டமிடல் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் வடக்கு மண்டல அமைப்பாளர் இராம.பெருமாள் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் க.சண்முக வேலாயுதம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
மக்களாட்சியின் அடித்தளமாக விளங்கும் கிராம சபைக் கூட்டம் வரும் 26-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டங்களில் குழந்தைகளுக்கான உரிமைகளை உறுதி செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு, சென்னை மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் மொத்தமுள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தீர்மானங்கள் இயற்ற வேண்டும் என்றார்.
இதே கோரிக்கைகள் அடங்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!