உள்ளாட்சி அமைப்புகளின் எல்லை மறுவரையறை மீது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்க வரும் 12ம் தேதி வரை அவகாசம்

உள்ளாட்சி அமைப்புகளின் எல்லை மறுவரையறை மீது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்க வரும் 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறையின்படி, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு வரைவு மறுவரையறை விபரம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்டது.

அவை, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் எல்லை வரைவு மறுவரையறை மீது, கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துப் பூர்வமாக, பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட பிடிஓ, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்),

மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது கலெக்டர் ஆகியோரிடம் நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமாக தெரிவிக்க கடந்த 5ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கும் கால அவகாசம் வரும் 12ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!