திருவண்ணாமலை கோயில் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு பயணம்

கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் 48 நாள்கள் நடைபெறும் புத்துணர்வு முகாமில் பங்கேற்க திருவண்ணாமலை மாவட்ட கோயில் யானைகள் ருக்கு, லட்சுமி புதன்கிழமை லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கோயில், மடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கான 48 நாள் புத்துணர்வு முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான புத்துணர்வு முகாம் வியாழக்கிழமை (ஜனவரி 4) தொடங்குகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தொடர்ந்து 48 நாள்கள் நடைபெறும் இந்த புத்துணர்வு முகாமில் 100-க்கும் மேற்பட்ட கோயில், மடங்களுக்குச் சொந்தமான யானைகள் பங்கேற்கின்றன.

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்கு: இந்த முகாமில் பங்கேற்க 29 வயதுடைய திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்கு புதன்கிழமை அதிகாலை பிரத்யேகமாக, பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த யானை ஒவ்வொரு ஆண்டும் எளிதில் லாரியில் ஏறிவிடும். ஆனால், இந்த முறை லாரியில் ஏற மறுத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முரண்டு பிடித்தது. இதையடுத்து, யானைப் பாகன்கள், கோயில் ஊழியர்கள் நீண்ட நேரமாகப் போராடி யானையை லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ருக்குவுடன் ஒரு கால்நடை மருத்துவர், 2 பாகன்கள், கோயில் ஊழியர்கள் சென்றுள்ளனர்.

யோக ராமர் கோயில் யானை லட்சுமி: இதேபோல, போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுடன் இணைந்த ஸ்ரீயோக ராமர் கோயிலுக்குச் சொந்தமான 22 வயதுடைய யானை லட்சுமி, லாரி மூலம் புதன்கிழமை அதிகாலை புத்துணர்வு முகாமுக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

யானையை கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன், மேலாளர் மகாதேவன் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!