வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தண்டாயுதபாணி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர்கள் எஸ்.முருகன், நரேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் சங்கரன், மண்டல துணை வட்டாட்சியர்கள் மூர்த்தி, திருமலை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின்போது, வறட்சி நிவாரண பட்டியல் தயாரிப்பதில் வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறையினர் முறைகேடு செய்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும், கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்.
மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலிருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், வறட்சியால் பாதிக்கப்பட்ட வேர்க்கடலை செடிகளை கைகளில் வைத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் அரிதாஸ், இராதாகிருஷ்ணன், மணி, ரமேஷ், குருலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருப்புப் பட்டையுடன் வந்த விவசாயிகள்: இதேபோல, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வட்டார அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பலர் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்கு வட்டாட்சியர் ரவி தலைமை வகித்தார். அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், கூட்டத்தில் அவர்கள் விவசாயிகள் பேசுகையில், தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காமல் காலம் கடத்தி வருகின்றன. எனவே, நிலுவையில் உள்ள தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து வந்தததாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!