ஜனவரி 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 28-ஆம் தேதி 1,896 சிறப்பு முகாம்கள் அமைத்து, 2.28 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.நலப் பணிகள் இணை இயக் குநர் பாண்டியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் மீரா (திருவண்ணாமலை), கோவிந்தன் (செய்யாறு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வரும் 28-ஆம் தேதியும், மார்ச் 11-ஆம் தேதியும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடத்துவது தொடர்பாக மருத்துவர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
பின்னர் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது: 2018-ஆம் ஆண்டில் முதல் தவணையாக ஜனவரி 28-ஆம் தேதியும், இரண்டாம் தவணையாக மார்ச் 11-ஆம் தேதியும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போலியோவை ஒழிக்க இந்தியாவில் 23-ஆவது ஆண்டாக நிகழாண்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இந்த சொட்டு மருந்தை அளிக்கலாம்.
வரும் 28-ஆம் தேதி சிறப்பு முகாம்களிலும், 29-ஆம் தேதி குழந்தைகளின் வீடுகளுக்கு சென்றும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில், அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
2 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து: திருவண்ணாமலை, செய்யாறு சுகாதார மாவட்டங்களை உள்ளடக்கிய திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் ஜனவரி 28-ஆம் தேதி மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 966 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 1,896 சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன. இந்த முகாம்களில் 7,546 பணியாளர்கள் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள், தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!