ஆட்சியராக விரும்பிய மாணவியை தனது காரில் அமரவைத்து ஊக்கப்படுத்திய திருவண்ணாமலை ஆட்சியர்

எஸ்எஸ்எல்சியில் அதிக மதிப்பெண்கள் பெற்றதுடன், ஆட்சியர் ஆவதே தனது லட்சியம் என்று கூறிய அரசுப் பள்ளி மாணவியை தனது கார் இருக்கையில் அமர வைத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மகிழ்வித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த மாங்கால் சிப்காட்டில் அமைந்துள்ள தனியார் காலணி (ஷூ)தயாரிக்கும் தொழிற்சாலை சார்பில், அரசுப் பள்ளிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது, கடந்த 2016 – 17ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் பொன்.கிருபானந்தன், மாவட்டக் கல்வி அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அரசுப் பள்ளியில் பயின்று கடந்த பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினார்.

இதேபோல, செய்யாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி மோனிஷா, கடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 491 மதிப்பெண்களை பெற்றதற்காக பரிசு, ரொக்கம் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

அப்போது, ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் நானும் உங்களைப் போல மாவட்ட ஆட்சியர் ஆவதே எனது லட்சியம் என மாணவி மோனிஷா தெரிவித்தார். இதனைக் கேட்ட மாவட்ட ஆட்சியர், பரிசளிப்பு விழா முடிந்தவுடன் மாணவி மோனிஷாவை சுழல் விளக்கு பொருத்தப்பட்ட தன்னுடைய காரில் தன்னுடைய இருக்கையில் அமர வைத்ததுடன், அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர், மாணவி மோனிஷாவிடம் அந்தப் புகைப்படத்தை அளித்த ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, இந்தப் புகைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற உன்னுடைய எண்ணம் அதிகரிக்க வேண்டும் என்றும், நானும் உன்னைப் போல அரசுப் பள்ளியில் படித்து தான் மாவட்ட ஆட்சியர் பதவியை அடைந்தேன் என்றும் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளுக்கு நல உதவி: விழாவின் போது, வந்தவாசி, வெம்பாக்கம், மாமண்டூர், கொருக்கை, திருவோத்தூர், செய்யாறு ஆகிய அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், அழிவிடைதாங்கி பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு விளையாட்டுச் சாதனங்களும் வழங்கப்பட்டன.

மேலும், இராந்தம், திரும்பூண்டி, வடமாவந்தல், கிரிதரன்பேட்டை, சோழவரம், சளுக்கை (வந்தவாசி), சிறுநல்லூர் உள்பட 12 பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மாத்தூர், கொருக்காத்தூர் பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகளும், 15 பள்ளிகளில் உள்ள நூல் நிலையங்களுக்கான புத்தகங்களும் என பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!