திருவண்ணாமலையில் இருந்து ஆந்திரத்துக்குச் சென்ற கரும்பு லாரிகள் தடுத்து நிறுத்தம்…

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ஆந்திரத்துக்குகு கரும்பு ஏற்றிச் சென்ற லாரிகளை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காததால் பெரும்பாலான விவசாயிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்பி வருகின்றனர். இதனால் திருவள்ளூர் மாவட்டம் வழியாக ஆந்திராவிற்குச் செல்லும் கரும்பு லாரிகளை மடக்கி திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்ட 11 கரும்பு லாரிகள், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வழியாக ஆந்திராவுக்கு சென்றுகொண்டிருந்தன. அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகள் அந்த லாரிகளை மடக்கினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சோளிங்கர் – பள்ளிப்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருத்தணி ஆர்.டி.ஓ. ஜெயராமன் மற்றும் திருத்தணி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகையை வழங்கவில்லை. மேலும் 22 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும், ஆந்திராவில் உள்ள சர்க்கரை ஆலைக்காரர்கள், அவர்களே ஆள்களை அனுப்பி கரும்பினை வெட்டி எடுத்துக் கொள்வதாகவும், இதனால் தங்களுக்குச் சிரமம் குறைந்து, வருமானமும் வருவதால் தமிழக விவசாயிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை அனுப்புவதாகவும் தெரியவந்தது.
இதுகுறித்து, கரும்பு விவசாயிகள் கூறும்போது, தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்புவதென்றால் தாங்களே கூலி ஆள்களை வைத்து வெட்டுவதாகவும், அதற்கு கூலி தருவதற்கு வட்டிக்குப் பணம் வாங்கி, கரும்பு வெட்டி அதனை வாடகை லாரிகள் மூலம் அனுப்புவதில் சிரமம் அதிகம் இருப்பதால், தங்கள் ஆந்திராவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவதாகவும், ஆந்திராவில் ஒரு வாரத்திற்குள் பணத்தை வழங்குகின்றனர் என்றும், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியம் பெறாதவர்கள் எங்கு வேண்டுமானாலும் அனுப்ப உரிமை உண்டு என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து 11 லாரிகளும் விடுவிக்கப்பட்டு, ஆந்திர எல்லையோரத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் ஆர்.கே.பேட்டை பகுதியில் போக்குவரத்து முடங்கி பரபரப்பு ஏற்பட்டது.

Source: dinamani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!