திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு – பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டதாகவும், அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி கடந்த மாதம் 10ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்பணி வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 2017-2018ம் ஆண்டிற்கான பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியில் 263 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் வீடு,வீடாகச் சென்று 6 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள், இடை நின்ற குழந்தைகள், இடம் பெயர்ந்த குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 1,500 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளது. இக்குழந்தைகளில் சிலர் ஆரம்பத்தில் இருந்தே பள்ளிக்கு செல்லாமலும், பள்ளி சென்று வறுமையில் இடையில் நின்றவர்களும், தேர்வில் தோல்வியடைந்து பள்ளி செல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இத்தகைய குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒருங்கிணைப்பாளர் அமரேசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், `பள்ளி செல்லா குழந்தைகள் கோடை விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதும் அவர்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கும், மிகவும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகள் உண்டு. உறைவிடப் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத நிலையை கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!