உஷார்! திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 26 போலி டாக்டர்கள் கண்டுபிடிப்பு…

திருவண்ணாமலை மாவட்டம் பல கிராமங்களை கொண்டது. கிராமப்புறங்களில் இருந்து வரும் மக்களுக்கு பல போலி டாக்டர்கள் மருத்துவம் பார்க்கின்றனர். அவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் நடவடிக்கையில் அதிர்ச்சி தரக்கூடியதாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 26 போலி டாக்டர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் கிரிஜா கூறியதாவது:–

மருத்துவப்பணி சேவைப்பணியாகும். உயிருக்கு போராடும் நிலையில் இருக்கும் நபர்களின் உயிரை காப்பாற்றும் பொறுப்பும், கடமையும் டாக்டர்களிடம் வேண்டும். அவ்வாறு தன்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் சேவை மனப்பான்மையில் சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை அளிப்பவர்கள் முறையான மருத்துவப்படிப்பிற்கு படித்திருக்க வேண்டும்.

ஆனால் பலர் கிளினிக் வைத்து டாக்டருக்கு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வரும் புகார்கள் மற்றும் சோதனையின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 போலி டாக்டர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பெண்களும் அடங்கும். இதில் ஒரு பெண் தப்பியோடி விட்டார். இவர்கள் டாக்டர் என்ற போர்வையில் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

இந்த 26 பேரில் 3 பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பித்தவர்கள் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

ஏமாற வேண்டாம்…

போலி டாக்டர்களாக கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். டாக்டருக்கு முறையாக படிக்காமல் பாரா மெடிக்கல் படித்தவர்கள், கிளினிக்கில் வேலை செய்தவர்கள், மருத்துவர்களான பெற்றோரிடம் இருந்து மருத்துவத்தை கற்றவர்கள் இவர்கள் தான் அதிகம் பேர் டாக்டர்கள் போர்வையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் நர்சிங் படித்தவர்களாக உள்ளனர். இதுபோன்று போலி டாக்டர்களாக வலம் வரும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

மேலும் பொதுமக்கள் இதுபோன்ற போலி டாக்டர்களிடம் சென்று ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!